கொம்பனை விரட்ட கூம்புவடிவ ஸ்பீக்கர்!- பழங்குடிகளின் ‘புதிய’ சாதனம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘‘ஆண்டவன் வந்திட்டான்... ஓடீரீ! கொம்பனோட, குட்டியும் வர்றான்... பார்த்தீரி!’’ - முன்னிரவு நேரத்தில் அந்த வனாந்திரத்தில் இப்படியொரு குரல் நாலா மூலைகளிலும் எதிரொலிக்கிறது.

பழங்குடி மக்கள் இந்தச் சத்தம் கேட்டதும் உஷராகிறார்கள். ஆங்காங்கு இருக்கும் கூரைக் குடிசைகளுக்குள் ஓடி ஒளிந்து, குடிசைப் படல்கள் வழியே பயத்துடன் பார்க்கிறார்கள். காட்டுக்குள் வெகுதூரத்தில் குட்டியுடன் ஒரு யானை. அதற்குத் துணை வந்ததுபோல் தூரத்தில் இன்னொரு ஆண் யானை. பெளர்ணமி வெளிச்சத்தில் அதன் கொம்புகளிலும் (தந்தம்) மினுக்கம்.

வனப் பகுதிகளில் காட்டு யானைகள் குட்டியோடு வருவதும், அவற்றைப் பழங்குடிகள் விரட்டுவதும் அன்றாடம் நடப்பதுதான். ஆனால், அந்த வனாந்திரத்தில் நாலாமூலைக்கும் ஒலித்த குரல்தான் அதிசயம். அந்தக் குரலை எழுப்பியவன் ஒன்பது வயதுச் சிறுவன் என்பதும், பல கிலோமீட்டர் தொலைவுக்குக் கேட்கும்படி அவன் குரல் எழுப்பியது,  கூம்பு வடிவ ஒலிபெருக்கியின் மூலம் என்பதும்தான் அந்த அதிசயத்துக்குள் புதைந்துள்ள ரகசியம்.

x