படை திரட்டும் காங்கிரஸ்!
காங்கிரஸுக்கு இம்முறை 13 முதல் 15 சீட்கள் வரை நிச்சயம் கிடைக்கலாம் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கணிக்கிறார்களாம். அதேநேரம், 13 சீட்டுக்கும் குறைவாகக் கிடைத்தால் அதைவைத்தே கே.எஸ்.அழகிரியின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பறிக்க டெல்லிக்குப் புறப்பட ஒரு பெரும் படையே தயாராய் இருக்கிறதாம். இந்தப் படையை வழிநடத்துவதில் முன்னணியில் நிற்பவர் கார்த்தி சிதம்பரம் என்கிறார்கள். இதற்காக, துட்டுக்கு சீட்டு உள்ளிட்ட பலவிதமான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
திருமணத்தில் திருப்புமுனை?
டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமணம் பேசிமுடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் சுவாமிமலையில், நிச்சயதார்த்தம் நடந்தது. சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது அப்போது உறுதியாகத் தெரியாமல் இருந்ததால் திருமண தேதி அப்போது உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், சித்தி தலைமையில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தினகரன். இந்த நிலையில், ஜூன் 13-ம் தேதி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் திருமணத்துக்கு நாள் குறித்திருக்கிறார்கள். கரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்த திருமணத்துக்காக 5 ஆயிரம் பத்திரிகைகளை அச்சடித்திருக்கிறார்களாம். இதையே சாக்காக வைத்து அதிமுகவிலுள்ள தங்களது விசுவாசிகள் சிலருக்கும் அழைப்பு அனுப்பும் முடிவில் இருக்கிறதாம் சசிகலா தரப்பு. இந்தத் திருமண விழாவுக்குப் பிறகு சசிகலாவை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளும் வேகமெடுக்கும் என்கிறார்கள்.