இந்தக் குள்ளநரிகளை காப்பாத்துங்கய்யா!- குரல் கொடுக்கும் கோவை புகைப்படக் கலைஞர்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

முதல் பார்வையிலேயே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன அந்தக் குள்ளநரிக் குட்டிகள். நாற்புறமும் பார்வையைச் செலுத்தும் தாய் நரி, சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் தன் வங்கிலிருந்து (வளை) ஒரு குட்டியைக் கூட்டிக்கொண்டு வெளியே வருகிறது. தொடர்ந்து மூன்று குட்டிகள் அதன் பின்னாலேயே வருகின்றன. சற்று நேரத்தில் குட்டிகள் தங்கள் தாயிடம் பால் குடிக்கின்றன. நிமிடங்களில் அமுதம் பருகிய மகிழ்ச்சியில் கூடிக் கும்மாளமிடுகின்றன. அபூர்வமான இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது எங்கோ அமேசான் காடுகளிலோ, கிர் காடுகளிலோ அல்ல. கோவை மாநகரின் ஒதுக்குப்புறமான புதர்க்காட்டில்தான்.

இதைப் படம் பிடித்த வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலர் வடவள்ளி சுப்பிரமணியன் ‘காமதேனு’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். “குள்ளநரிகள் இங்கேயே இருந்தால் ஆபத்து. அதனால் அவற்றை அடர் வனத்தில் கொண்டுபோய் விடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிவருகிறார் இவர். ஊருக்குள் வரும் காட்டுயானை, சிறுத்தை, புலி போன்ற மிருகங்களைப் பிடித்துக் கொண்டுபோய் காட்டில் விட வேண்டும் எனக் கோரிக்கைகள் வைப்பது சகஜமாகி வரும் சமகாலத்தில், இது என்ன குள்ளநரிக்கான கோரிக்கை குரல்?

இது தொடர்பாகப் பேச சுப்பிரமணியனைச் சந்தித்தபோது, கோவை மருதமலையை அடுத்துள்ள சின்னமலை அடிவாரத்துக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அங்கே நிறைய நிலங்கள் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு புதர்க் காடுகளாய்க் கிடந்தன. அந்தப் புதர்காட்டில் நிறைய வங்குகள் (வளைகள்). ‘‘இவை எல்லாமே நான் படம் எடுத்த குள்ளநரிகள் வசிக்கும் வங்குகள்’’ எனக் குறிப்பிட்டவர், நேராக விஷயத்துக்கு வந்தார்.

x