நிறம் மாறும் நூல்!- உயிர்காக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு


எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டுவிட்டது. அறுவை சிகிச்சையின்போது பாதுகாப்பான முறையில் தையல் போடும் நவீனத் தொழில்நுட்பமும் வந்துவிட்டது. ஆனால், நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த இயலாத ஏழை, நடுத்தர நாடுகளில் தையலில் ஏற்படும் தொற்றுகள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதிலும் சிசேரியன் செய்துகொள்ளும்போது ஏற்படும் தொற்றுகளால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், ஏழை நாடுகளில் வசிக்கும் பெண்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, நிறம் மாறும் அறுவை சிகிச்சை நூல் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் டேசியா டெய்லர்.

யார் இந்த டேசியா?

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவி டேசியா. ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர், அனைவருக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு கொடுக்கும் குழுக்களில் இணைந்து பணியாற்றி வருகிறார். தனது ஆசிரியர் கரோலின் வாலிங் மூலம் சயின்ஸ் ஃபேர் க்ளப்பில் சேர்ந்த டேசியா, பணம் இல்லாததால் மருத்துவம் கிடைக்காமல் போகும் சூழலை மாற்றி, அனைவருக்கும் மருத்துவம் கிடைக்கும்படி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்றும் முடிவு செய்தார். இதற்காக பள்ளிப் பரிசோதனைக்கூடத்தில் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கியவர், ஒரே ஆண்டில் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்தி அதன் காப்புரிமை கேட்டு காத்திருக்கிறார்!

x