கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
தேர்தல் பரப்புரை நேரத்தில் மதுரைக்கு வராத குறையைப் போக்கும் விதமாக, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் மதுரையில் முகாமிட்டிருந்தார். அப்போது அவரது கட்சியினர் குடும்பம் குடும்பமாக வந்து அவரைச் சந்தித்தார்கள். குழந்தைகள் சிலர் அவருக்கு முகக்கவசம், சானிட்டைசர்களைப் பரிசளித்தார்கள். சில குழந்தைகள் பிறந்த நாள் கேக் ஊட்டினார்கள். அவர்களைத் திருமா கொஞ்சி மகிழ்ந்த வேளையில் ‘காமதேனு' நேர்காணலுக்காகச் சந்தித்தேன். இனி பேட்டி...
1990-ல் மதுரையில் விசிகவை தொடங்கியபோது இருந்த திருமாவுக்கும் இன்றைய திருமாவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
நான் நானாகவே இருக்கிறேன். 1990-ல் இருந்த புரிதல்தான் 2021லும் இருக்கிறது. அது விரிவடைந்து இருக்கிறது, வலுவடைந்திருக்கிறது. அந்த அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை. இடதுசாரியாக, அம்பேத்கரிய, பெரியாரியராக, மார்க்சியராகவே இருக்கிறேன். ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக, அவர்களது செயலை நியாயப்படுத்துகிறவனாக நான் மாறவில்லை.
“திருமா இன்னொரு அம்பேத்கராக வருவார் என்று எதிர்பார்த்தோம், ஆனால், தேர்தல் அரசியலுக்குப் போய் இன்னொரு கருணாநிதியாக மாறிவிட்டார்” என்று உங்களது பழைய நண்பர்கள் சிலர் சொல்கிறார்களே?