தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களில் சிலர் நடந்துகொள்ளும் விதம் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
காவலர்களில் சிலர், இரவு நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவரும் சரக்கு வாகன ஓட்டிகளை மறித்து லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. சில இடங்களில் இரவில் மின்வெட்டு காரணமாக வீட்டுக்கு வெளியில் வந்து அமரும் மக்களைக் காவல் துறையினர் மிரட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையிலும் காவல் துறையினர் சிலரின் அத்துமீறலைப் பார்க்க முடிகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அடித்தட்டு மக்கள்தான். அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மக்கள் மீது இப்படியான சுமைகளைச் சுமத்துவது அறமாகாது. பொதுமுடக்க விதிமுறைகளை மீறுபவர்களிடம் காவல் துறையினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் வேண்டுகோள் விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் காவல் துறையினர் இதை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
அதேசமயம், நாடு முழுவதுமே கரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் இருக்கிறது. மனித உயிர்களை ஒப்பிட, முகக்கவசத்தின் விலை ஒரு விஷயமே அல்ல. கூடுதலாக, சானிட்டைசர், சோப் போன்றவற்றையும் மக்கள் தங்கள் கைப்பைகளில் சுமந்துசெல்ல முடியும். ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவதன் மூலம்தான் பெருந்தொற்று ஆபத்திலிருந்து நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் காத்துக்கொள்ள முடியும். இரு தரப்பும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!