அதிமுகவை தொடங்கிய என் கணவர்..!- அனகாபுத்தூர் ராமலிங்கத்தின் மனைவி ஃப்ளாஷ் பேக் பேட்டி


தி.ஞானபாலன்
gnanabalan.t@hindutamil.co.in

தேர்தல் திருவிழா முடிந்தே முடிந்துவிட்டது. இந்தத் திடீர் திருவிழாவின் திடீர் மரியாதைக்குரியவர்களாக பார்க்கப்பட்ட மக்கள், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களை வைத்து  ‘ஐந்தாண்டு’க்கு திட்டம் தீட்டும் அரசியல்வாதிகள், அடுத்தகட்டம் பற்றி அரங்க ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வரிசையில் காத்திருந்து தங்களை அரியணை ஏற்றிய மக்கள் இனி ஒரு பொருட்டல்ல. தேர்தலுக்குத் தேர்தல் வாக்களிக்கும் மக்களின் யதார்த்த நிலைமை இதுதான் என்றாலும் அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்திய, எளிய மனிதர்களையும் அவர்களின் வாரிசுகளையும்கூட அரசியல் உலகம் அப்பட்டமாய் மறந்துவிடுகிறது. அப்படி மறக்கப்பட்ட ஒரு மனிதர் தான் அனகாபுத்தூர் ராமலிங்கம்.

அண்மையில் பல்லாவரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில், மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த 78 வயதுப் பெண்மணியை மேடைக்கு அழைத்து நாற்காலியில் உட்காரவைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், “இவர்தான் அனகாபுத்தூர் ராமலிங்கத்தின் மனைவி சின்னம்மாள்” என்று அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்த பலருக்கு அனகாபுத்தூர் ராமலிங்கத்தைப் பற்றியே தெரியாது  என்பதற்கு, சன்னமாக ஒலித்த ஓரிரு கைதட்டல்களே சாட்சியம் கூறின. ராமலிங்கம் சாதாரணமானவர் அல்ல. அதிமுகவைத் தொடங்கிய பெருமைக்குரியவர். தனது கணவரின் புகழை அசைபோட்டபடி வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னம்மாளை அனகாபுத்தூரில் சந்தித்தோம்.

x