‘மாண்புமிகு வாக்காளர்கள்’- கடல் கடந்து வந்து கடமையாற்றியவர்களுக்கு ஒரு சல்யூட்!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

‘வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல; கடமையும்கூட’ என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வூட்டியும் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது, இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது. சொந்த ஊரில் இருந்து கொண்டே வாக்களிக்கச் செல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் கடல் கடந்து, தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற வருவோரை ‘மாண்புமிகு வாக்காளர்கள்’ என்றுதானே சொல்ல வேண்டும். அப்படியான சிலரை ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன்.

துபாயிலிருந்து பறக்கைக்கு...

நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், வாக்களிப்பதற்காகவே துபாயிலிருந்து விடுமுறை எடுத்து வந்திருக்கிறார். அவரிடம் பேசினேன். ‘‘துபாயில் வேலை செய்கிறேன். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே வேட்பாளர்கள் தயாராவதைப்போல நானும் ஆர்வத்தோடு தயாராகிவிட்டேன். விமானத்தைப் பொறுத்தவரை முன்கூட்டியே டிக்கெட் புக் செய்தால், நியாயமான கட்டணம் இருக்கும். கடைசி நேரத்தில் புக் செய்தால், தேவையின் அடிப்படையில் கட்டணம் மிக அதிகமாக உயரும். இதனாலேயே தேர்தல் தேதி அறிவித்ததுமே போக, வர டிக்கெட் புக் செய்துவிட்டேன். துபாயிலிருந்து திருவனந்தபுரம் வர ஒருமுறை கட்டணம் 15 ஆயிரம் ரூபாய். போக, வரக் கட்டணம் உள்பட என் வாக்கைச் செலுத்த 50,000 ரூபாய் செலவு செய்திருப்பேன். ஆனால், இவ்வளவு தூரம் பயணித்து வருவதோ, பணம் செலவாவதோ பெரிய விஷயமில்லை. ஜனநாயகத்தின் மீதான பார்வையே முக்கியம்.

x