கரு.முத்து
muthu.k@kamadenu.in
இடதுசாரிகள் வலுவாக இருக்கும் தொகுதி நாகப்பட்டினம். இங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் பல முறை அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அண்மைக் காலங்களில், நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியை இஸ்லாமிய இயக்கங்களும் கேட்கின்றன. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய தேசிய லீக் கட்சியின் நிஜாமுதீன் திமுக கூட்டணியில் வெற்றிபெற்றார். 2016-ல், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் முகமது ஜவஹிருல்லாவும், அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றிபெற்றார்.
அதிமுகவின் மகிழ்ச்சியும் மிரட்சியும்
கடந்த காலங்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் ஜீவானந்தம், ஜெயபால் ஆகியோர் அமைச்சர்க
ளாகவும் பதவிவகித்தனர். இதனால் இந்த முறை கூட்டணிக்குக் கொடுக்காமல் அதிமுகவே நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது.
நகரச் செயலாளரும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் நெருங்கிய சகாவுமான தங்க.கதிரவன் களமிறங்கியிருக்கிறார். உள்ளுர்க்காரரான அவர் சட்டென்று தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டார். கட்சிக்காரர்கள், கூட்டணிக் கட்சியினர், தொகுதியில் உள்ள பொதுவான பிரமுகர்கள், அமைப்புக்கள், இயக்கங்களைச் சந்தித்து அவர் ஆதரவு கேட்கும்வரை திமுக கூட்டணியில் வேட்பாளரே அறிவிக்கப்படவில்லை. அதனால் தெம்பாக வலம்வந்த தங்க.கதிரவன், திமுக போட்டியிடாமல், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தனது வெற்றி சுலபமாக இருக்கும் என்று நம்பினார். அவர் விருப்பப்படியே, விடுதலைச் சிறுத்தை களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதும் அதிமுக வட்டாரம் குதூகலமடைந்தது.