வாக்களிப்போம்... ஜனநாயகம் காப்போம்!


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ல் நடக்கவிருக்கிறது. ஜனநாயகத்தின் மிக முக்கியமான நிகழ்வாக மட்டுமல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம், அரசியல், சமூக மாற்றம் என அத்தியாவசியமான பல விஷயங்களுக்கு வித்திடும் முக்கிய தருணமாகவும் தேர்தல் இருக்கிறது.

அரசு நிர்வாகத்திலும், கொள்கை வகுப்பிலும் பொதுமக்கள் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால், அரசு நிர்வாகத்துக்கு எந்த அரசியல் கட்சி வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் கடமையும் வாக்காளர்களாகிய நம்மிடம்தான் உள்ளது என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி சொல்ல முடியும்.

மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அரசு நிர்வாகத்தில் தொடரவும், மக்கள் நலனைப் பற்றிய கவலை இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்பவும்  வாக்காளர்கள்தான் அனுமதி வழங்குகிறார்கள். அதனால்தான் தேர்தலை ‘ஒரு விரல் புரட்சி’ என்று சொல்கிறோம். அரசமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்த இந்த மகத்தான ஏற்பாடு, நம் அனைவரது எண்ணவோட்டத்தையும் மதிப்புடன் ஏற்று மக்களாட்சியின் அடிப்படை அம்சமாக இன்று வரை தொடர்கிறது.

அதனால்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுக்கிறது. அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இந்த முறை கரோனா பெருந்தொற்றுக்கு நடுவே தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செய்திருக்கிறது.

x