வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஏப்ரல் 1-ல் வாக்குப்பதிவு நடந்த 30 தொகுதிகளில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் கூடுதல் கவனம் பெற்றது. பாஜக சார்பில், மம்தாவின் முன்னாள் சகா சுவெந்து அதிகாரி போட்டியிடும் தேர்தல் களம் என்பதாலும் ஊடகத்தின் கவனம் இந்தத் தொகுதியிலேயே குவிந்திருந்தது. வாக்குப் பதிவு நாளில் நிகழ்ந்த சலசலப்புகளால் நந்திகிராம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பாஜகவின் பாய்ச்சல்
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், 2016 தேர்தலில் பாஜக வென்றது வெறும் 3 தொகுதிகளில்தான். எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18-ல் பாஜக வென்றது மம்தாவை அதிரவைத்தது. மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் பாஜக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக கைப்பற்றியவற்றில் பெரும்பாலானவை வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவைதான்.