முந்தும் பாஜக... முட்டிமோதும் காங்கிரஸ்!- அசாமில் ஆட்சி யாருக்கு?


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கும் அசாம் மாநிலத்தில், முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது அரசியல் களம். இந்த முறையும் பாஜகவே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், அது அத்தனை எளிதான காரியமில்லை என்பதே களநிலவரம். அமித் ஷா, மோடி என பாஜகவின் பெருந்தலைகள் அசாமுக்கு அடிக்கடி வந்துசெல்வதே இதற்கு அத்தாட்சி!

கூட்டணிக் கணக்குகள்

பாஜக கூட்டணியில் அசாம் கண பரிஷத் (ஏஜிபி), ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எஃப்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஆஞ்சலிக் கண மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் போடோலாந்து மக்கள் முன்னணியும் (பி.பி.எஃப்) இணைந்திருப்பது அக்கூட்டணிக்குப் பலம் சேர்த்திருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பி.பி.எஃப் இப்போது எதிர்முகாமுக்கு வந்திருக்கிறது. கடந்த முறை 12 இடங்களில் வென்ற கட்சி என்பதால் அதன் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

x