கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் வாழ்ந்த இந்திய குரு, யோகி. சூஃபி துறவி என்று அழைக்கப்படும் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்துக்கள் இவரை தத்தாத்ரேயரின் அவதாரமாகவும் இஸ்லாமியர்கள் பிர் அல்லது குதுப் என்றும் வணங்குகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் பாத்ரி கிராமத்தில் அந்தணர் குலத்தைச் சேர்ந்த கங்கா பாவத்யா – தேவகிரியம்மா தம்பதி வசித்து வந்தனர். பாவத்யா படகோட்டியாக இருந்தார். சிவ பக்தர்களான இவர்களுக்கு நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லை. ஒரு நாள், பலத்த மழை பெய்த நிலையில், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. தனது படகை பத்திரப்படுத்துவதற்காக, ஆற்றங்கரைக்குச் சென்றார் பாவத்யா. தேவகிரியம்மா மட்டும் இல்லத்தில் இருந்தார்.
அப்போது முதியவர் ஒருவர் வந்து வீட்டுக் கதவைத் தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்ததும், மழை அதிகமாக இருப்பதால், அன்று இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டார் முதியவர். தேவகிரியம்மாவும் அவரை திண்ணையில் தங்க அனுமதித்தார். சிறிது நேரம் கழித்து, முதியவர் மீண்டும் கதவைத் தட்டி, தனது பசிக்கு ஏதேனும் உணவு அளிக்கும்படி கேட்டார். தேவகிரியம்மாவும் இல்லத்தில் இருக்கும் பொருட்களை வைத்து உடனே உணவு சமைத்துக் கொடுத்தார்.