எம்.கபிலன்
readers@kamadenu.in
திராவிடக் கட்சிகளின் கோட்டை என விழுப்புரம் தொகுதியைச் சொல்லலாம். இங்கே 1967-லிருந்து திமுக, அதிமுக கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. 1962, 1967, 1971 ஆகிய மூன்று தேர்தல்களில் திமுகவின் சண்முகம் வெற்றிபெற்றார். அவருக்கடுத்து பொன்முடி 1989-லிருந்து 2006 வரை நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் (1991 தேர்தலைத் தவிர) நான்குமுறை வெற்றி பெற்றார்.
பொன்முடியின் கோட்டையைத் தகர்த்தவர்
பொன்முடியின் அசைக்க முடியாத வெற்றிக் கோட்டையாக இருந்த விழுப்புரத்தை, 2011 தேர்தலின்போது தன்வசமாக்கியவர் சி.வி.சண்முகம். 2016 தேர்தல் சூழலும் சண்முகத்துக்கே சாதகமாக இருந்ததால், பொன்முடி திருக்கோயிலூருக்கு இடம்பெயர்ந்து வெற்றியைத் தொட்டார். இந்த முறையும் திருக்கோயிலூரிலேயே பொன்முடி போட்டியிட, மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் விழுப்புரத்தில் களமாடுகிறார் சட்டத் துறை அமைச்சரான சி.வி.சண்முகம். தொடர்வெற்றி சண்முகத்துக்குப் புதிதில்லை. இதற்குமுன் போட்டியிட்ட திண்டிவனம் தொகுதியிலும்கூட 2001, 2006 என இரண்டு முறையும் வெற்றிகளைக் குவித்தவர். பின்னர், அது தனி தொகுதியானதால் அங்கிருந்து விழுப்புரம் வந்தார்.