கட்டக்காளை - 15


லச்சுமாயிக்கு காயங்கருப்பட்டி குடுக்க வந்த கழிச்சியாத்தா, பின்னாயி, அன்னத்தாயின்டு, கட்டக்காளை வீட்டாளுக பூராம், கல்லு அடுப்பில ஆக்கின சோத்தையும், ஊரே மணக்க வச்ச கோழிக் கொழம்பயும், வகுறார சாப்பிட்டாங்க. அப்டியே வீட்டுகுப் பின்னாடி இருந்த வேப்ப மரத்து நெழல்ல, செவக்கச் செவக்க வெத்தலையப் போட்டுக்கிட்டு பேசிச் சிரிச்சுக்கு ஒக்காந்து இருந்தாக.
“வாங்கப்பாய்… ஒரு வாயி சாப்பிட்டு ஒக்காருங்க…”ன்டு மருமகன் கட்டக்காளைய, சாப்பிடக் கூப்பிட்டா பெருமாயி… கட்டக்காளை எந்திரிச்சு கையக் கழுவிட்டு வீட்டுக்குள்ள போனான்.

பின்னத்தேவனுக்கு மூத்த மகன்தாங் மலைராமன், குடும்பத்த தாங்கி நிக்கப்போற குலசாமின்டு நெனச்சுக்கிருந்த நெனப்பில மண்ணள்ளிப் போட்டுப்பிட்டான்.

எளந்தாரி முறுக்கு, எதிரிக்காரன் மககூட பழக்கமாயிட்டான். சேதியக் கேள்விப்பட்ட பின்னத்தேவன், எம்புட்டோ சொல்லிப் பாத்தான்… ம்ஹூம் கேக்கிறமாரியில்ல, அவ பின்னாடியே திரிஞ்சான்…

“பிள்ளைகள எப்புடிச் செவைக்க வைக்கணுமின்டு, பெத்தவகளுக்குத் தெரியாதா... எதப் பத்தியும் ஓசிக்காம செய்யிற தப்பு, மத்தவகளயும் பாதிக்குமின்ற ஒணச்சியிருந்தா இப்படிச் செய்வானா…” பின்னத்தேவன் கோபத்தில பொலம்புனான்.

அவெந் தங்கச்சி கச்சம்மா சடங்காகி, கட்டிக்குடுக்குற வயசுலகாத்துக்கெடக்கா… அவள நல்ல எடத்தில புடிச்சுக்குடுக்கற வரைக்கும் காத்திருக்காம… படக்கின்டு, கலியாணத்த முடிச்சுக் கூட்டியாந்திட்டான்.

“வயசுப் புள்ள வீட்டுல இருக்காளேன்ற நெனப்பு இல்லாம, பொம்பளச் சொகம் கேக்குதோ… பொசகெட்டநாயி, வீட்டுக்குள்ளயே நீ வரப்பிடாது… கண்ணுக்குத் தெரியாம, எங்கிட்டாச்சும் ஓடிப்போயிரு”ன்டு… கோவந்தலைக்கேறுன பின்னத்தேவன், நெதானமில்லாம வஞ்சுப்புட்டான்.

“நா எதுக்கு ஓடணும்… எல்லாத்திலயும் எனக்கும் பங்கிருக்கு. எனக்குச் சேரவேண்டியத பிரிச்சுக்குடு”ன்டு, மலைராமன், பதிலுக்குப் பதிலு பேசி, சரிசோட்டுக்கு மல்லுக்கு நின்டான்…

ஒண்ணுக் கொண்ணு பெரிய பெரச்சனையாயிருச்சு… ஊரே கூடிநின்டு எம்புட்டோ சரிக்கட்டிப் பாத்தாங்க, முடியல… இதுக்கும் மேல வம்ப வளத்தமின்டா, அசிங்கம், கேவலமின்டு நெனச்சான் பின்னத்தேவன்.

சூட்டோட சூடா, ஊராளுக முன்னாலயே, அவனுக்கு சேர வேண்டிய பங்கப் பிரிச்சுக் குடுத்து, இவென் எனக்கு மகனே இல்ல… நாஞ்செத்தாலும் வரப்பிடாதின்டு பெறவா முறிவாங்கிப்பிட்டான் பின்னத்தேவன்.

அதுக்கப்பறம் மலைராமன் கூட ஒட்டுமில்ல, ஒறவுமில்லன்டு ஆகிப்போச்சு. மலைராமன், கலியாணம் முடிச்சுக்கிட்டுப் போன ஆறு மாத்தையிலயே, தாந் தங்கச்சி, கச்சம்மாளுக்கு நடந்த கலியாணத்துக்கும் வரமுடியல… அப்பெங் வய்யிமின்டு பயந்துக்கிட்டோ என்னமோ எட்டிக்கூடப்பாக்கல.

கோவத்தில எடுத்த முடிவு, பிள்ளை குட்டியானச் சரியாப் போயிருமின்டு ஊராளுக நெனச்சாங்க…

வருசம் பல கடந்தும் பொண்டாட்டி புள்ளைகன்டு, உள்ளூருக்குள்ளயே வாழ்ந்த மலைராமன், எந்தப் பேச்சு வாத்தையும் இல்லாம ஒதுங்கியே காலங்கழிச்சான். அதே வீராப்போட, பின்னத்தேவனும் பிடிவாதமா பேரம்பேத்திகளப் பாத்தாக்கூட பேசுறது இல்ல.
பொம்பளப் பிள்ளைக இன்னொருத்தன் வீட்டுக்கு வாக்கப்பட்டுப் போன நாள்லருந்து, இந்த மண்ணுல வாழ்ற கடசிக் காலம் வரைக்கும் தாய்மாமென்ற உரிமையை, தாங்கூடப் பெறந்தவங்களத் தவிர வேற ஆருக்கும் அம்புட்டு லேசுல விட்டுத்தரமாட்டாக.
அண்ணனுக்கு அண்ணனா, தாய்க்குத் தாயா எல்லாத்திலயும் பக்கபலமா இருக்க வேண்டிய தாய்மாமன் ஒறவு, லச்சுமாயிக்கு இருந்தும் அது வாய்க்காமப் போயிருமோன்டு ஏங்கிக் கெடந்தா…

சாப்பிட்ட எலைய, பெரம்புக் கூடையில எடுத்துக் காந்து, வெளியில போட்டுட்டு வீட்டுக்குள்ள வந்தா லச்சுமாயி. வாசப்படிய மறிச்சு ஓராளு நின்டுக்கிருந்ததப் பாத்து திடுக்கின்டாகிப் போனா.

“ஏத்தாய்… வாசல்ல ஆறு நிக்கிறதின்டு பாரு…” பெருமாயிகிட்ட சொன்ன லச்சுமாயி, “யண்ணே… உள்ள வாண்ணே…”ன்டு சொல்லி கண்கலங்கிட்டா.

ரெண்டு தங்கச்சிக கலியாணத்துக்கும் வர மாட்டாமத் தவிச்ச மலைராமன், ரெட்டப் பிள்ளைகளப் பெத்துக் கெடக்கிற தங்கச்சி லச்சுமாயி மகெங்களுக்கு, தாய் மாமென் மொற செய்யணுமின்ற ஆசையோட வந்திருக்கான்.

பின்னத்தேவன் இல்லாத நேரமாப் பாத்து, வரணுமின்டு காத்துக்கிருந்தவன்… பத்து வருசங்கழிச்சு இன்னைக்குத் தான், பெறந்த வீட்டு வாசல்ல வந்து நிக்கிறான்.

ஓடியாடி வெள்ளாண்டுக்குத் திரிஞ்ச வீடு, இப்ப அந்நியமாத் தெரிஞ்சுச்சு… ஒடம்பெல்லாம் சிலுத்து, கண்ணீர் முட்டிக்கி நிக்கிது. ஏக்கத்தோட பாத்துக்கிட்டு இருந்தான்.

வேப்ப மரத்தில வெத்தல போட்டுக்கிருந்த கட்டக்காளை வீட்டுப் பொம்பளைக எந்திரிச்சு வந்திட்டாக… ஆருன்டு, வாசலப் பாத்த பெருமாயிக்கு, தூக்கி வாரிப்போட்டிருச்சு...

“யாத்தே… இவென் எதுக்குடி வந்திருக்கான்… 

ங்கொப்பனுக்கு தெரிஞ்சாக் கொல்லப்போதுடி…” பெருமாயி பதறுனா.

வந்து நிக்கிறது ஆருண்டு அறிஞ்சுக்கிட்ட கழிச்சியாத்தா, “பெத்தபிள்ள வந்ததுக்கு இப்புட்டு பயப்பிடுறவ… வராத மறுமகென்
வந்திருக்கு… நீ எதுக்கு ஒண்ணு கெடக்கா ஒண்ணப் பேசிக்கிருக்க…”ன்டு சொல்லி முடிக்க...

வாசல்ல நின்டுக்கிருந்த மலைராமன், “ரெண்டு பொம்பளைப் புள்ளைகளோட பெறந்தும், அண்ணனா இருந்து, ஒங்களுக்கு எதுஞ்செய்ய முடியாத பாவியாயிட்டேன்…”ன்டு மனசொடஞ்சு சொன்னான்.

“ஓம் புள்ளைகளுக்குத் தாய் மாமென் இல்லன்ற நெலமை வந்திறப்பிடாது…”ன்டு சொல்லி அழுதான். இதப்பாத்த லச்சுமாயும் அழுக, அங்க இருந்தாளுகளும் கண்ணக் கசக்கிட்டாங்க.

பெத்த மனசு, வான்டு கூப்பிடமாட்டாமத் தவிக்கிது. சந்தைக்குப் போன புருசனுக்குத் தெரிஞ்சா வம்பு வந்துருமின்ற பயம்… புருசனா… புள்ளையான்ற மனப் போராட்டம் பெருமாயி மனசுக்குள்ள சூறாவளி கெனக்கா சுத்துது. அதுக்கும் மேல அவெலால அங்கென நிக்க முடியல… உள்ளு வீட்டுக்குள்ள போயிட்டா.

“எம்மருமகங்கள, தூக்கியாங்க… தாய் மாமென்ற மொறைய இங்கனருந்தே செஞ்சுட்டுப் போயிறேன்…”ன்டு உரிமையோட சொன்னான் மலைராமன்.

இதக் கேட்ட லச்சுமாயி கண்ணீர் விட, பிள்ளையத்தூக்கி வச்சிருந்த கச்சம்மாளும், பிரிஞ்சு போயிருந்த அண்ணன, சாமியாப் பாத்து, ஒண்ணுசேத்து வச்சிருச்சுன்டு நெனச்சுக் கும்பிட்டா.

“சீக்கிரமா பிள்ளையத் தூக்கிட்டு வாம்மா…” மலைராமன் சொன்னான்.

லச்சுமாயி விசுக்கின்டு போயி, ஒரு பிள்ளையத் தூக்கிக்கிட்டு, “எக்கா… நீயும் ஒரு பிள்ளையத் தூக்கிட்டுவா…”ன்டு கச்சம்மா கிட்ட சொன்னா.

ரெண்டு பேரும் ஆளுக்கொரு பிள்ளைகளைத் தூக்கியாந்து, அண்ணன் மலைராமன் கிட்ட காமிச்சாக…

பிள்ளைகள கையில வாங்குன மலைராமனுக்கு மொகமெல்லம் பூரிச்சுப் போச்சு. ரெண்டு பிள்ளைகளயும் ஆசதீர… முத்தங்கொஞ்சுனான். பிள்ளைகள உத்துப் பாத்துக்கிட்டே இருந்தவென் கண்ணுலருந்து, கண்ணீரு வர… “ரெண்டு பேரும் அப்பெங் கெணக்காவே இருக்காங்க…”ன்டான்.

அண்ணன் சொன்னதக் கேட்ட லச்சுமாயிக்கு மனசெல்லாம் குளுந்து போச்சு… “ஆமெண்ணே”…ன்டு சொல்லிக்கிட்டே, தன்னயறியாம வடிஞ்ச கண்ணீரத் தொடச்சுக்கிட்டா.

லச்சுமாயிக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்கான்டு கட்டக்காளைக்குத் தெரிஞ்சிருந்தாலும், இன்னைக்குத் தான் நேருல பாக்குறான்.
மனசுக்குள்ள அடக்கி வச்சிருந்த பாசத்த பத்து வருசங்கழிச்சு, அண்ணனும் தங்கச்சிகளும் கொட்டி அழுதுக்கிருக்காக. இவுக அழுகிறதப் பாத்து சுத்தி நின்ட மத்த ஆளுகளும் அழுதுக்கிருக்காக.

எல்லாத்தையும் பாத்துக்கிருந்த கட்டக்காளை எந்திரிச்சு பக்கத்தில வந்தான்.

“ஏய்… மாப்ள, சந்தோசமா இருக்கிறத விட்டுப்பிட்டு, சின்னப்பிள்ள கெணக்கா அழுதுக்கிருக்கீங்க…”ன்டு சொன்னான்.
அழுகைய கட்டுப்படுத்தின மலைராமன், “வா…மாப்ள”ன்டு கூப்பிட்டு, “இந்தாய்யா… ஏம் மருமகனப்புடி…”ன்டு சோத்துக் கையில வச்சிருந்த பிள்ளைய கட்டக்காளைக்கிட்ட கொடுத்தான்.

இன்னொரு பிள்ளைய தங்கச்சி லச்சுமாயிக்கிட்ட குடுத்திட்டு, “எம்மாய்… மாப்ளயும் நீயும் சேர்ந்து வடக்காம திரும்பி நில்லுங்க…” ன்டு சொல்லிக்கிட்டே கண்ணத் தொடச்ச மலைராமன், வேட்டியத்தூக்கி டவுசர் பைக்குள்ள வச்சிருந்த டாப்பாவ எடுத்தான்.

அதுக்குள்ள இருந்த செவப்புக் காயிதத்தப் பிரிச்சு… சுருட்டி வச்சிருந்த ரெண்டு சங்கிலிய எடுத்து, சாமியக் கும்பிட்டு… “ஏம் மருமகெங்க… பாலுபாலா வரணு”மின்டு சொல்லி ரெண்டு பிள்ளைக கழுத்திலயும், ஆளுக்கொரு சங்கிலியப் போட்டு விட்டான்.

ஆருக்காகவும் தாய் மாமென்ற மொறைய விட்டுக் குடுக்கப்பிடாதுன்ற வைராக்கியத்துலருந்த மலைராமன், தாய் மாமன்ற அந்தஸ்தில, தாங்கடமையச் செஞ்ச திருப்தியில, நெறஞ்ச மனசோட அங்கெருந்து கெளம்புனான்.

தாங் கலியாணத்துக் கூட வராத மச்சுனன், தாய் மாமென்ற மொற செய்யணுமின்டு வந்தத நெனச்சு, மகுந்து போன கட்டக்காளை, இனிமேலாச்சும் இந்தக் குடும்பம் ஒண்ணு சேரட்டுமின்டு மனசார நெனச்சுக் கிட்டு, ஊருலருந்து வந்தாளுகள கூப்பிட்டுக்கிட்டு புதுக்கோட்டைக்கு கெளம்பிட்டான்.

(தொடரும்)

x