அரசியல் தலைவர்களே அலட்சியம் காட்டலாமா?


தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்திலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பது அச்சமூட்டுகிறது. இந்நிலையில், பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் மட்டுமல்ல அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், இந்த விஷயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்களே அலட்சியமாக இருப்பது கவலையளிக்கும் விஷயம்.

ஏற்கெனவே பொது இடங்களில் கூடும் மக்கள், கரோனா எனும் ஒரு பெருந்தொற்று நம்மிடையே இன்னும் வீரியத்துடன் இருப்பதையே மறந்துவிட்டவர்களைப் போல அலட்சியம் காட்டுகிறார்கள். உரிய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் எனும் உறுதிமொழியுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல மாணவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் தொற்றுக்குள்ளான செய்திகள் கரோனா அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அரசியல் கட்சியினர் பின்பற்றுவதாகவே தெரியவில்லை. அரசியல் தலைவர்கள் சிலர் தொற்று அபாயத்தில் இருந்தாலும், அதற்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ள முன்வருவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன. முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களை வலியுறுத்தும் முக்கிய அரசியல் தலைவர்களும் அவற்றைக் கண்டிப்புடன் பின்பற்றுவதே இல்லை.

உண்மையில், தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டும் போதாது; தொடர்ந்து முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று சொல்லும் மருத்துவர்கள், தடுப்பூசி காரணமாக ஒருவரின் உடலில் பெருந்தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியம் குறைவாக இருக்கலாம்; ஆனால், அவர்கள் மூலம் பெருந்தொற்று பரவும் அபாயமும் இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள்.

x