என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் மார்க்சிஸ்ட்டுகள் உற்சாகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுமுனையில், ஏகப்பட்ட குழப்பங்களில் காங்கிரஸ் கட்சி சிக்கித் தவிப்பது காம்ரேடுகளுக்கு இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. சபரிமலை விவகாரம், தங்கக் கடத்தல் புகார் என மார்க்சிஸ்ட் அரசை விமர்சித்து வீதி வீதியாகக் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தாலும், அதையெல்லாம் சட்டையே செய்யாமல் ‘உரப்பானு (உறுதியான) எல்டிஎஃப்’ எனும் கோஷத்துடன் அதகளம் செய்துகொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள்.
செல்வாக்கை இழக்கும் காங்கிரஸ்
கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ல் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணி வாரிச்சுருட்டியது. இந்தியாவிலேயே அதிகபட்சமாகக் கேரளத்திலிருந்துதான் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்பி-க்கள் தேர்வானார்கள். இவ்வளவு ஏன்? சோனியா குடும்பத் தொகுதியான அமேதி தொகுதி மக்கள் கைவிட்டபோதும், மலையாளிகள்தான் ராகுல் காந்தியைத் தாங்கிப்பிடித்தனர். இந்திய அளவில் ஆட்சிமாற்றம் இருக்கும் என்றும், ராகுல் காந்தியை அடுத்தத் தலைமுறையின் தலைவராகவும் மலையாளிகள் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடுதான் அந்தத் தேர்தல் முடிவு.