கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
2011, 2016 தேர்தல்களில், பெரிய சோரகை சென்றாயப் பெருமாளைக் கும்பிட்டுவிட்டே பிரச்சாரத்தைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. இரு தேர்தல்களிலும் அவருக்கு வெற்றியையே பரிசாகத் தந்தது எடப்பாடி தொகுதி.
2016 வெற்றிக்குப் பின்னர் நடந்த அரசியல் புயல்களின் மத்தியில், அவருக்கு முதல்வர் பதவியும் கிடைத்தது. இந்த முறையும் அதே சென்றாயப் பெருமாளைச் சேவித்து பரிவட்டம் கட்டி ஓட்டு வேட்டையாடப் புறப்பட்டிருக்கிறார் முதல்வர். மீண்டும் அவர் முதல்வர் ஆவது அப்புறம் இருக்கட்டும், சொந்தத் தொகுதியில் அவரின் வெற்றிவாய்ப்பு எப்படி? எடப்பாடிக்குள் ஒரு சுற்று வந்தோம்.
“எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வென்றுவிட்டார் என்றே எழுதிக்கொள்ளுங்கள். எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் என்பதுதான் கேள்வி” என கெத்து காட்டுகிறார்கள் களப்பணியாற்றும் அதிமுகவினர். மறுபுறம், ‘‘எப்படிப் பார்த்தாலும் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ஓட்டுகள் வரை எங்கள் வேட்பாளர் பூக்கடை சேகர் பிரிப்பது உறுதி’’ என்று அமமுகவினரும், ‘‘பெண்கள் ஓட்டும், இளைஞர்கள் ஓட்டும் எங்களிடம் வந்துவிடும் எனும்போது அவர் எப்படி ஜெயிக்க முடியும்?” என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தாசப்பராஜூ ஆதரவாளர்களும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் கணக்கிட்டோ என்னவோ, “1996-ல் பர்கூரில் எப்படி சுகவனம் என்கிற இளைஞரிடம் ஜெயலலிதா தோற்றாரோ, அதே மாதிரி எங்கள் எளிய வேட்பாளர் சம்பத்குமாரிடம் தோல்வியடையப் போகிறார் பழனிசாமி” என்று முஷ்டி தட்டுகிறார்கள் திமுகவினர்.