திமுக டு பாஜக... தாமரையை மலர வைப்பாரா சகலகலா டாக்டர்?


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

‘சட்டென்று மாறுது வானிலை’ என்பது தேர்தல் காலத்துக்கு ரொம்பவே பொருந்தும் போல. நேற்றுவரையில் திமுகவின் தீரமிக்க எம்எல்ஏவாக வலம்வந்த மதுரை டாக்டர் சரவணன், சீட் கிடைக்காத கோபத்தில் பாஜகவில் சேர்ந்துவிட்டார். சேர்ந்தது மட்டுமல்ல, அடுத்த 3 மணி நேரத்தில் பாஜகவில் சீட் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார் மனிதர்.

மறுநாள், மதுரையில் அவரை வைத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது பாரதிய ஜனதா கட்சி. கேள்வி மழைகளைப் பொழிந்தார்கள் செய்தியாளர்கள். சென்னையில் என்ன பதிலைச் சொன்னாரோ, அதே பதிலைத்தான் வேறுவேறு வார்த்தைகளில் சொன்னார் சரவணன். “மாவட்டச் செயலாளர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள், நான் ஒரு டாக்டர். உலக நாடுகளே கரோனாவைக் கண்டுபயந்தபோது குறுகிய காலத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் மோடி. நான் ஒரு சமூக சேவகன் எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே போய் பணியாற்றுவேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் சரவணன்.

“மதிமுக, திமுக, பாஜக என்று எந்தக் கட்சிக்குப் போனாலும் போனவுடனே சீட் வாங்கிடுறீங்களே, அந்த ரகசியம் என்ன சார்?” என்று என் பங்கிற்கு நானும் ஒரு கேள்வியைக் கேட்டேன். “நான் ரொம்ப நல்லவன். அதனாலதான்” என்றார் பாருங்க சரவணன், பக்கத்தில் இருந்த பாஜகவினரே அசந்துவிட்டர்கள்.

x