கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
சித்தர் என்பவர்கள் பூரணத்துவம் அடைந்தவர்கள். அதாவது வாழும்போதே முக்தி அடைவதால் ஜீவன் முக்தர்கள் ஆகிறார்கள். மற்றொரு நிலையும் உண்டு. அது பராமுக்தர் ஆகும். தலையாய முக்தி என்று அழைக்கப்படும் மரணம் மீது முழுமையான ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு சக்தியை அதிகரித்து முன்னேறியவர்களே பராமுக்தர் நிலையை அடைகின்றனர். இப்படிப்பட்ட பராமுக்தர் நிலையை அடைந்தவர் மகா அவதார் பாபாஜி.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பரங்கிப்பேட்டையில் சுவேதாநாத அய்யர் – ஞானாம்பிகை தம்பதி வசித்து வந்தனர். அவர்களின் மகனாக, கிபி 203-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி (கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம்) நாகராஜ் என்ற இயற்பெயருடன் பாபாஜி பிறந்தார். இவர்களது மூதாதையர் (நம்பூதிரி) கேரளாவின் மலபார் கடற்கரைப் பகுதியில் இருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பரங்கிப்பேட்டைக்கு குடிபெயர்ந்தவர்கள்.
பரங்கிப்பேட்டையில் உள்ள சிவன் கோயிலில் நாகராஜின் தந்தை தினமும் பூஜை செய்து வந்தார். அப்போது திடீரென ஒரு நாள் சிவபெருமானின் திருமேனி முருகப் பெருமானாக மாறியதாகக் கூறப்படுகிறது. அதனால் அக்கோயில் அன்றுமுதல் முத்துக்குமார சுவாமி கோயிலாக அழைக்கப்பட்டு இன்றும் முருகன் கோயிலாகவே விளங்கி வருகிறது. இந்தக் கோயிலில் தந்தை செய்யும் பூஜைகளைப் பார்த்தபடியே வளர்ந்து வந்தார் நாகராஜ்.