சோதனை, எளிய மக்களைச் சோதிப்பதாக இருக்கக்கூடாது!


தேர்தலில் அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கத்தில், பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது சிறந்த நோக்கம் கொண்டது என்றாலும், இந்த நடைமுறையானது சாமானியர்களுக்கு... குறிப்பாக, வணிகர்கள், விவசாயிகள் போன்றோருக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது.

உரிய ஆவணம் இல்லை என்ற காரணத்தின் பெயரில், சாமானியர்கள் தங்கள் பணத்தையும் நகைகளையும் அதிகாரிகளிடம் பறிகொடுக்கும் அவலம் தொடர்கிறது. பின்பு மீண்டும் அவற்றைப் பெறுவதற்குள் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரிகளும், காவல் துறையினரும் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் பலரிடம் புரிதல் இல்லாததையும் பார்க்க முடிகிறது. சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரொக்கப் பணம் கொண்டுசெல்பவர்கள், அதிகாரிகள் சொல்லித்தான் இதுதொடர்பான விஷயங்களையே அறிந்துகொள்ளும் நிலை இருக்கிறது. பணம், நகைகளை எடுத்துச் செல்லும்போது என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் பலருக்குத் தெரியவில்லை.

இந்த முறை, குறுகிய கால அவகாசத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், ஏற்கெனவே சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்கள். வணிகர்கள் உரிய ஆவணத்தைக் காட்டியும் சில அதிகாரிகளால் தொந்தரவுக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. மறுபுறம், அரசியல் கட்சிகள் தங்கள் வலுவான வலைப்பின்னலைக் கொண்டு பணப் பட்டுவாடாவைத் தொடரவே செய்கின்றன. குறிப்பாக, ஆளுங்கட்சி என்றால் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய முடியாமல் நெருக்கடிக்குள்ளாவதையும் பார்க்கிறோம்.

இந்நிலையில், சாமானியர்களுக்குப் பிரச்சினை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நடைமுறை ஏன் இன்னமும் கடுமையானதாகவே இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது. உண்மையில் இது சம்பிரதாயமாகவும் அல்லாமல், சாமானியர்களைச் சங்கடப்படுத்தும் விதமாகவும் அல்லாமல் நடைமுறைச் சாத்தியக்கூறுகளுடன் அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். சம்பந்தப்பட்டவர்கள் இவ்விஷயத்தில் ஆவன செய்ய வேண்டும்!

x