கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
கோவை தெற்கில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன், வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் தொகுதியின் பல பகுதிகளுக்குத் திடீர் விசிட் அடித்தார். அது தொடர்பான படங்கள் வைரலாகின. எனினும், ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது சைக்கிளில் வந்த ஒருவர் கமலிடம் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியது, இதுவரை வெளிவராத செய்தி.
கமலிடம் கேள்வி எழுப்பியவர் அத்தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரும், கோவை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலருமான ஏ.டி.ராஜன். அவர் கமலிடம் என்ன கேள்வி கேட்டார்? ராஜனிடமே பேசினோம்.
கமலிடம் அப்படி என்னதான் கேட்டீங்க?
ரேஸ்கோர்ஸ் சாலையில காலை 6.30 மணிக்குக் கமல் வந்திருந்தார். “கமல் சார் வணக்கம். இங்கே வாங்க”ன்னு கூப்பிட்டேன். வந்தார். “கோவை தெற்குத் தொகுதியில் 40 ஆண்டு காலமாக எனக்குத் தொடர்புகள் இருக்கு... நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்லிருக்கீங்க. உங்ககூட நேத்து பிரச்சாரத்துக்கு வந்தவங்களைப் பார்த்தேன். யாரும் கோயமுத்தூர்காரங்களாத் தெரியலை. அப்படி யாராவது இருந்தால் அவங்க வாக்காளர் அடையாள அட்டையக் காட்டச் சொல்லுங்க. 40 வருஷமா இந்தத்தொகுதிக்குள்ளே எத்தனையோ நல்லது கெட்டது நடந்திருக்கு. அதுக்கெல்லாம் நீங்க வந்திருக் கீங்களா?”ன்னு கேட்டேன்.