சின்ன மகளும் வந்தாச்சு!
விராலிமலை தொகுதியில் இந்தமுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேறுவது எளிதான காரியமல்ல என்றே கள நிலவரம் சொல்கிறதாம். இதை உள்வாங்கிய அமைச்சர் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறார். தாய்மார்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், கடந்த முறை தனது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியை களத்தில் இறக்கி தனக்காக பிரச்சாரம் செய்யவைத்த விஜயபாஸ்கர், இம்முறை தனது இளைய மகள் அனன்யாவின் கையிலும் மைக்கைக் கொடுத்திருக்கிறார். அத்துடன், “6,500 ரூபாய் மதிப்பில் வீட்டுக்கு ஒரு எல்இடி டிவியும் வரப்போகுது” என்று அதிமுக வட்டாரத்தில் மெல்லமாய் கிசுகிசுக்கிறார்கள். “டிவி எல்லாம் எப்படி வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வார்கள்?” என்று கேட்டால், “அதுக்குத்தான் தனக்குத் தோதான அதிகாரிகளை முன்கூட்டியே தொகுதிக்குள் பக்காவா செட்பண்ணி வெச்சுட்டோம்ல...” என்று சிரிக்கிறார்கள்.
குஷ்புவை முந்திக் கொண்ட நயினார்!
நடிகை குஷ்புவுக்கு முதலில் சேப்பாக்கம் தொகுதியைத்தான் தருவதாக இருந்ததாம் பாஜக. ஆனால், அந்தத் தொகுதியை பாமக கண்டிப்பாகக் கேட்டு வாங்கியதால் குஷ்புவுக்கு சேப்பாக்கம் இல்லாமல் போனது. இதையடுத்து நெல்லை தொகுதியில் அவரை நிறுத்த தயாரானது பாஜக. குஷ்புவின் கணவர் சுந்தர்.சி பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நெல்லையில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதால், இப்படி கணக்குப் போட்டார்களாம். இந்த விஷயம் எப்படியோ மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குத் தெரியவர, நமக்கு ஆபத்து வந்து விடுமோ என மிரண்ட நயினார், வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பாகவே முதல் ஆளாகப் போய் வேட்பு மனுவை தாக்கிவிட்டார். இதையடுத்தே, ஆயிரம் விளக்கில் குஷ்புவை நிறுத்தியதாம் பாஜக.