தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஐநூற்றுக்கும் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டு ஓராண்டாகியிருக்கும் நிலையில், நிலைமை மீண்டும் மோசமாகத் தொடங்குவது கவலையளிக்கும் விஷயம்.
தமிழகத்தில் இதுவரை 8.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சுமார் 8.30 லட்சம் பேர் சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடுதிரும்பி விட்டனர். தொற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் அது கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியிருக்கிறது. பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் செல்வது, கூட்டமாகக் கூடுவது எனப் பலரும் அபாயத்தின் வீரியத்தை உணராமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மேலும், இது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், வீதி வீதியாக நடக்கும் பிரச்சாரங்கள் என அதிக அளவில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. எனவே, கூடுதல் கவனம் அவசியமாகிறது. இப்படியான சூழலில், கரோனா தடுப்பூசி பரவலான பயன்பாட்டுக்கு வந்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை தடுப்பூசி தொடர்பாகச் சந்தேகங்களை எழுப்பிவந்த செயற்பாட்டாளர்கள் முதல், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை பலரும் நம்பிக்கையுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது வரவேற்கத்தக்க விஷயம். இந்த ஆக்கபூர்வ மனப்பான்மை நம் அனைவருக்கும் வர வேண்டும்.
தொற்று அதிகம் பரவினால், மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதை உணர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் அனைவரும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். அலட்சியத்தின் காரணமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து அவஸ்தைப்படும் மாநிலங்களைப் பார்த்து வருகிறோம். நாமும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடாமல் இருக்க மன உறுதியுடன் செயல்படுவோம்!