கட்டக்காளைக்கு ரெட்டப் பிள்ள பெறந்து, அதுகளத் தூக்கி பகுமானமாக் கொஞ்சிக்கிருந்த நேரத்திலதான்… தேக்கி வச்சிருந்த மழத்தண்ணிய, ஒத்தொப் பொட்டுல்லாம ஒடச்சு விட்டுட்டாங்கன்டு… புதுக்கோட்டச் சனங்க, ஒண்ணுக்கொண்ணு கோவத்தில முறுக்கிக்கிட்டு நிக்கிறாங்க.
புதுக்கோட்ட கம்மா நெறஞ்சுச்சுன்டா சுத்துப்பட்டியில அஞ்சாறு ஊருக்கு தண்ணிப் பஞ்சமே இருக்காது.
பட்டந் தவறாம மழ பேஞ்சிச்சுன்டா… ஓட ஒடப்பில ஊத்துக் கெளம்பிரும். சலசலன்டு ஓடுற மேத்தண்ணிக்கு, கீக் கம்மாயிலருந்து தவ்வாளம் போட்டுக்கு வார மீனுகள, சீலத்துணிய விரிச்சும், சாருப்பத்த போட்டும் புடிச்சிக்காந்து கொழம்பு வைப்பாங்க. அம்மியில அரைச்ச மசாலவுல மீன் கொழம்பு கொதிக்கிறப்ப வார வாசனம்… ஊரயே கூப்பிடும்.
மானம்பாத்த பூமியில, மழ தண்ணியில்லாம காஞ்சு கெடந்த சனம்… கஞ்சிக்குப் படாதபாடு படுதுக. நல்லா பேஞ்ச மழையப் பாத்த சனத்துக்கு நெல்லுக் கஞ்சி குடிக்கணுமின்டு நாக்குச் சொட்டாம் போட்டிருச்சு…
நெல்லு நடணுமின்ற நெனச்சிக்கிருந்தப்ப... வரப்பு வாய்க்கால அடச்சுத் தேக்கி வச்ச தண்ணிய, ஒடச்சு விட்டுட்டாங்க. அந்த ஆத்திரத்துல தான் இப்ப சனம் ‘கே…கே’ ன்டு நிக்கிது.
“நெல்லுக் கஞ்சிக்கு தொன்னாந்த கெழடு கட்டைகளோட ஆசயத் தீத்துப்பிடலாமின்டு நெனச்சா… குடிக்கிற கஞ்சியில மண்ணள்ளிப் போட்டது கெணக்கா செஞ்சுட்டாங்களேப்பா…” செவசாமி ஆத்தமாட்டாம பொலம்புனான்.
“இந்தப் பொசகட்ட வேலையச் செஞ்சவனச் சும்மா விடப்பிடாதப்பா… அவெங்க ஆருன்டு கண்டுபுடிச்சாகணும்…” பதிலுக்கு சாவடங்கி, அங்கெனருந்த ஆளுககிட்ட சொன்னான்.
“கையில மட்டும் சிக்கட்டும்… அவெனக் கொல்லாம விடமாட்டேன். நம்மள அவத்தப் பயலா நெனச்சுப்புட்டாங்களே…” வீரனன் கோவத்தில சொல்லி முடிக்கல…
“மடைய ஒடைங்கடா”ன்டு கம்மா மடைக்கிட்டருந்து சத்தம் கேக்குது.
தேக்கி வச்சிருந்த தண்ணியெல்லாத்தையும் ஒடச்சுவிட்டுட்டாங்கன்ற ஆத்திரத்தில இருந்த செல்லச்சாமி, செவசாமி,பொன்னுச்சாமி, வீரனன், சாவடங்கி, அம்போதி, வீருக்காளைன்டு அங்கனருந்த அம்புட்டாளுகளும் மடைக்கிட்ட ஓடியாந்து பாத்தாங்க.
எரம்ம நாயக்கரும், கினிங்கட்டிமாயனும், அரமன ஆளுகள கூட்டியாந்து கம்மாயில இருந்த, மிச்சமீதி தண்ணியயும் ஒடச்சு விட்டுக்கிருக்காங்க…
“ஏப்பா... மடைய ஒடைக்கிறீங்க” பொன்னுச்சாமி சத்தம் போட்டார்.
“அரமனைக்குப் பாத்தியப்பட்டட நெலத்துல, ஆரக்கேட்டு நெல்லு நடப் போறீங்க… அதான் தேக்கி வச்ச தண்ணிய ஒடச்சு விட்டோம்...”மின்டு அரமனக் கையாளா வந்த காராமணி கூசாம சொல்லவும், அங்கனருந்த ஆளுக வேகமாயிட்டாங்க…
என்னமோ சதி பண்ணப் போறாங்கன்டு வெளங்கிரிச்சு… நடக்க கூடாத எதோ நடக்கப் போதுன்டு பதற்றமாயிருச்சு.
அரமன ஆளுகளுக்கு பக்கபலமா நிக்கிற இவிங்கதான் இம்புட்டுக்கும் காரணமின்றது புரிஞ்சு போச்சு… அங்கனருந்த எளவட்டப் பயலுகள விட்டாக் கரும்பிப் பிடுவாங்க போல… அம்புட்டு ஆக்ரோஷத்தில இருக்காங்க.
“பொறுங்கடா… பெரியாளுக பேசிக்கிருக்கமில்ல…” எளந்தாரிகள கட்டுப்படுத்திட்டு… “வெவரந்தெரிஞ்ச வரைக்கும் நாங்கதான உழுதுக்கிருக்கோம்… இப்ப எதுக்கு அரமனையக் கேக்கணும்…” அரமனையாளுககிட்ட சொன்ன செல்லச்சாமி.
“ஏன்டா கினிங்கட்டி மாயா, புதுசா கம்பெடுத்துப் போட்டு வம்பிழுக்கப் போறீங்களா…”னு கேட்டான்.
இடுப்பு ஒசரத்துக்கு நின்னுக்கிருந்த கினிங்கட்டிமாயன் ப்ளீச்சின்டு எச்சியத்துப்பி, “அதெல்லாந் தெரியாது…”ன்டு சொல்லிக்கிட்டே
எரம்ம நாயக்கர மேலாமின்ன பாத்தான்.
“ஏப்பா… நீ யெல்லாம் ஒரு பெரிய மனுசன்… இப்படிப்பட்ட காரியம் பண்ணலாமா..? ”ன்டு எரம்ம நாயக்கருக்கிட்ட கேக்க… “அரமனை சொன்னதத்தாஞ் செஞ்சோம், வேற எதுந்தெரியாது…”ன்டு ஒண்ணுந் தெரியாதவெங் கெனக்கா நிக்கிறான்.
“அரமனைகிட்ட நெலத்த வாங்குனதுக்கு, குடுக்க வேண்டியதெல்லாம் எப்பயோ குடுத்து முடிச்சாச்சு… இப்ப எதுக்கு வில்லங்கத்த வளக்குறீங்க… இது நல்லதுக்கில்ல…” எரம்ம நாயக்காரப் பாத்து செல்லச்சாமி அதட்டிச் சொன்னான்.
அரமன ஆளுககிட்ட கண்ணக் காட்டுன கினிக்கட்டி மாயன், கம்மா மடைய ஒடைக்கச் சொன்னான். அரமன ஆளுக, கடப்பாரக் கம்பியால மடையக் குத்தி ஒடைக்கப் போனாங்க.
கூட்டத்த வெலக்கிட்டு வேகமா வந்த வீரனன், கினிங்கட்டி மாயன, ஒரே எத்தில… எத்தி கம்மாக்கரையில உருட்டி விட்டான்… மடைய ஒடச்சுக்கிருந்த அரமன ஆளுகளயும் மம்புட்டிப் புடிய வச்சு, அடிச்சு மண்டையப் பொளந்துப்பிட்டான்…
நாட்டுக் கருவேலம் புடிக்கும் அதுக்கும், அடிச்ச அடியில மண்ட ‘பாளம் பாளமா’ பொளந்திருச்சு… ரத்தம் சாரைசாரையா கொட்டுது.
இதப் பாத்த எரம்ம நாயக்கரு… அந்த எடத்திலருந்து எப்ப கெளம்புனான்டு தெரியல. திரும்பிப் பாத்தா, ஓடப்பள்ளத்தில எறங்கி மேக்காம ஓடுறான்.
“அரமன ஆளுகளயே அடிச்சுப் பிட்டீங்கல்ல… ஒங்கள என்னா பண்றோமின்டு பாருங்க…” அழுகையும் கோபமாச் சொல்லிட்டு, மூஞ்சியில வடிஞ்ச ரத்தத்த தொடச்சுக்கிட்டே அத்தன பேரும் ஓடிட்டாங்க.
உருளக்கட்ட கெணக்கா கம்மாக்கரையில உருண்ட கினிங்கட்டிமாயன், சாலி முள்ளுக்குத்துன வேதனையில, மொனங்
கிக்கிட்டே எந்திரிச்சு வந்தான்…
ஆளாளுக்கு அவென அடிக்கப் போக… சிக்குனா வெளுத்துப்புடுவாங்கன்டு பயந்து, குண்டோட்டமா ஓடிப்பிட்டான்…
“பெரியாளுக பேசிக்கிருக்கும் போது, அடங்கி இருக்காம, இப்படிச் செஞ்சுப்புட்டீங்களேடா... அரமனை கோபத்துக்கு ஆளானா, என்னென்ன நடக்கப்போதோ தெரியலயே…” பொன்னுச்சாமி பயத்தில பொலம்புனாப்ல.
அடுத்து என்னா நடக்கப் போதோன்ற பயம்… அங்கனருந்த ஆளுகள வாட்டிப்புடிச்சு.
“கட்டக்காளை ஊருல இல்லாத நேரத்தில… கைநீட்டிருக்கக் கூடாதோ. ஆத்திரம் கண்ண மறைச்சிருச்சு”ன்னு ஓசிச்சான் வீரனன். கட்டக்காளைக்கு தாக்கல் சொல்லிக் கூட்டியார ஓனாப்பட்டிக்கு கெளம்பிட்டான்…
“உணச்சியில்லாத நாக்கு, ருசிதேடிருச்சு… நெல்லுக்கஞ்சிக்கு ஆசப்பட்டது… இத்தம் பெரிய வில்லங்கமாப் போச்சே…”
செவசாமி ஆத்தமாட்டாம பொலம்பிக்கிட்டே, மத்தாளுகளையும் கூட்டிக்கிட்டு ஊருக்குள்ள வந்துட்டான்.
சோளக்கஞ்சி, கேப்பக்களின்டு திண்டதயே தெனைக்கும் திண்டு, நாக்குச் செத்துப் போன சனத்துக்கு, நெல்லுக் கஞ்சின்டா அம்புட்டு உசுரு.
ரெண்டாளுக் கஞ்சிய, ஒருமிக்க குடிச்சுப் பிடுவாங்க… அதும் நல்லனாத் திங்கனா அன்னைக்கித்தான்… மத்தபடி, எப்படா… நெல்லுக்கஞ்சி கெடைக்கிமின்டு நாக்கு ஏங்கும், நெல்லுக்கஞ்சிக்கு சனம் அம்புட்டு அலமலந்து கெடக்கு.
கம்மா மடைத்தண்ணி பாயிற வயலு வச்சிருக்கவங்க, ரெட்டக்கமலைக்கும் வத்தாத கெணறு வச்சிருக்கவங்க மட்டும்தான் நெல்லு நட முடியும்…
நெல புலமில்லாத கூலிக்காரச் சனம்… மண்ணக்கூடத் தின்டுக்கிட்டு, காலத்தக் கடத்திக்கித் திரியும்.
தொத்த மாட்ட வச்சுக்கிட்டு, கமலை எறச்சு செழிம்பா தண்ணிப்பாச்ச மாட்டாம, நெல்லையும் வெளையவைக்க முடியாம சாவியாத்தான் அறுக்கணும்.
அதுகளுக்கு கருக்கா குருனையத்தவிர, ஒத்தப் பொட்டு அரிசி வீடுவந்து சேராது…
தோட்டம் தொறவு ஏகமா வச்சிருக்கிற, கட்டக்காளை வீட்டுல மட்டுந்தான் நெல்லுக் கஞ்சிக்கு பஞ்சமிருக்காது… பொழுது சாஞ்சிருச்சின்டா, நெல்லுக்கஞ்சி கொதிக்கிற வாடயப் புடிச்சுக்கிட்டு… பிள்ளச் சோறு வாங்குறதுக்காக கைப்பிள்ளையோட கட்டக்காளை வீட்டில காத்துக் கெடப்பாக.
பாலுக்குப் பத்தாம, அழுகிற பிள்ளைக்குப் பசியாத்தணுமின்டு, கிண்ணத்த எடுத்துட்டு வார பிள்ளத்தாச்சிப் பொம்பளைகளுக்கும் இல்லன்டாப் பாவமின்டு செத்த உண்டனாவே ஆக்கி வச்சிருவா கழுச்சியாத்தா. ஒரு நாக்கூட ஆரையும் அதுந்து பேசினதில்ல.
கொஞ்சூன்டு சோத்தக் கொழையப் பெனஞ்சு, பிள்ளைக்கும் ஊட்டி விட்டுக்கிட்டு… பழமை பேசிக்கிட்டே மிச்சம் மீதிச் சோத்தயும், வழிச்சு நக்கிக்கிட்டு இருப்பாளுக…
ஊடாமாடா ஒத்தாசை செய்யிற பொம்பளைகளுக்கு… வடிச்ச தண்ணியில, கொஞ்சம் சோத்துப் பருக்கையும் போட்டு, சுடச் சுட கழிச்சியாத்தா குடுப்பா.
“ஓங் கையிப் பக்குவத்தில… வடிச்ச தண்ணி கூட, அமிர்தமா இருக்குத்தா…”ன்டு பெருமையா சொல்லிச் சிரிச்சுக்கிட்டே, இன்னொரு சொம்பு வடிச்ச தண்ணிய வாங்கிக் குடிப்பாளுக. வடிச்ச தண்ணி அம்புட்டு ருசியாருக்கும்.
உசுர வெறுத்துட்டு ஓட்டமும் நடையுமா கட்டக்காளையத் தேடி ஓனாப்பட்டிக்கி வந்தான் வீரனன்…
ஆலமரத்துக்கிட்ட ஒக்காந்துக்கிருந்த ஒச்சுக்காளை வீரனன் வார தினுசப் பாத்துப் பதறிப் போனான். எந்திரிச்சுப் போயி என்னா… எவடமின்டு வீரனன்கிட்ட கேட்டுப்பாத்தான்.
ஹூம்… எதும் சொல்லாம, “அண்ணன எங்க”ன்டு கேட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்தான் வீரனன்.
லச்சுமாயி பக்கத்தில, உக்காந்து, தாம் பிள்ளைகளக் கொஞ்சிக்கிருந்த கட்டக்காளை, வீட்டுக்குள்ள வந்த வீரனனக் கவனிக்கல…
பிஞ்சு கொழந்தையோட கால வருடிக்குடுத்து… சிரிச்சு மகுந்துக்கிருந்தான்.
“வாங்கப்பா… அந்தத் தம்பி வந்திருக்குடி…” மக லச்சுமாயிகிட்ட பெருமாயி சொன்னா.
திரும்பிப் பாத்த கட்டக்காளை, “வாடா…”ன்டு சொல்லிக்கிட்டே, திண்ணையிலருந்து எந்திரிச்சான்… படுத்துக்கெடந்த லச்சுமாயி, அதுபாட்டுலக் கெடந்த மாராப்புச் சீலைய ஒழுங்குபடுத்துனா.
ரெட்டக் கொழந்தைக பெறந்திருக்கிறதப் பாத்த வீரனன், கிட்ட வந்து பாத்தான்...
“மதினி… ரெண்டு சல்லிட்டுக் காளையப் பெத்துப் பிட்டீங்களே…” பெருமையாச் சொல்லிக் கொஞ்சுனான்…
மூஞ்சி கொறாவிப் போயிருக்கிறதப் பாத்த கட்டக்காளை, “மொதல்ல முஞ்சியக் கழிவிட்டு கஞ்சியக் குடிச்சிட்டு
வாடா…”ன்டு அனுப்பி வச்சான்.
செத்த நேரங்கழிச்சு மாட்டுக் கொட்டத்துப் பக்கம் வீரனனக் கூட்டிக்கிப் போன கட்டக்காளை, “என்னாடா பெரச்சனை…” ன்டான்
“ஒண்ணுமில்லைண்ணே…” வேகமா தலையாட்டுனான் வீரனன்.
“ஓங்கிட்ட எதாச்சும் சொன்னானா…”னு ஒச்சுக்காளைகிட்ட கேக்க… “சொல்ல மாட்டுறானாப்பா… இவெங் வந்த சீரே சரியில்ல…”ன்டான் அவென்.
“சொல்றா… என்னா பெரச்சனை…”ன்டு கட்டக்காளை விடாமக் கேக்க… பதற்றத்தோட நடந்ததப் பூராம் சொல்லிப்பிட்டான் வீரனன்.
“அவிங்கள சும்மாவாடா விட்டீங்க…” கினிங்கட்டிமாயன் மேல வன்மம் வச்சுக்கிருக்க ஒச்சுக்காளைக்கு கோவம் தலைக்கேறுச்சு. ஆனா, கட்டக்காளை பாத்த பார்வையில கம்மின்டாயிட்டான்.
அம்புட்டையும் நெதானமக் கேட்ட கட்டக்காளை… தாம் பொண்டாட்டி பிள்ளைகள விட்டுட்டு, ஊருக்குப் போக மனசில்லாமத் தவிச்சான்.
வீட்டிலருந்தவக கிட்ட சொல்ல முடியாம சொல்லிட்டு… வண்டியப் பூட்டிக்கிட்டு புதுக்கோட்டைக்கு கெளம்பிட்டாங்க.
என்னா நடக்கப் போதோன்ற பதற்றம்… வீரனன் மனச அப்பிக்கிருச்சு!
(தொடரும்)