நந்திகிராமில் நடந்தது என்ன? - மம்தாவின் ‘காயம்’ சொல்லும் கதை!


வெ.சந்திரமோகன்

தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களில் பல்வேறு விதங்களில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராமில் மனுத்தாக்கல் செய்த நாளிலேயே ‘மர்ம நபர்களால்’ தள்ளிவிடப்பட்டு காயமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அவற்றில் ஒன்று. எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் என திரிணமூல் காங்கிரஸிலிருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் பாஜகவுக்குத் தாவியிருக்கிறார்கள். மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா என பாஜக தலைவர்கள் வங்க மண்ணில் தாமரையை மலரவைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்துவருகிறார்கள். இந்நிலையில், மம்தா ‘காயமடைந்திருக்கும்’ சம்பவம், இந்தத் தேர்தலில் முக்கியத் திருப்புமுனையாக இருக்குமா எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

காலில் ஏற்பட்ட காயம்

மார்ச் 10-ம் தேதி நந்திகிராமில் மனுத்தாக்கல் செய்துவிட்டு, ரேயபரா பகுதியில் பிருலியா ராணிசவுக்கில் உள்ள கோயிலில் வழிபட்டார் மம்தா. மாலை 6.15 மணி அளவில் கோயிலிலிருந்து வெளியே வந்து காரில் ஏறப்போனபோது தன்னை நான்கைந்து பேர் தள்ளிவிட்டதாகவும், காரின் கதவில் கால் மாட்டிக்கொண்டதால் தடுமாறி கீழே விழுந்துவிட்டதாகவும் மம்தா கூறியிருக்கிறார். அப்போது மூச்சு வாங்கியபடி செய்தியாளர்களிடம் பேசிய மம்தா தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகச் சொல்லி, அங்கிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்டார். இரவு 9 மணிவாக்கில் கொல்கத்தாவின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

x