வன்னியருக்கு உள் ஒதுக்கீடு; ராமதாஸின் தேர்தல் நாடகம்!- வேல்முருகன் விளாசல்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்து சேலம் ஓமலூரில் நடந்த தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய திளைப்பில் இருக்கிறார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதைத் தங்கள் வரலாற்றுச் சாதனையாகப் பாமகவினர் கொண்டாடிவரும் நிலையில், ‘அதனால் வன்னியர் களுக்குப் பயனில்லை, பாதிப்புதான்’ என்று அந்த மாநாட்டில் பேசி அதிரவைத்திருக்கிறார். அவரோடு அலைபேசி வழியாக உரையாடினேன்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, பாமகவின் நாற்பதாண்டு காலப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று நெகிழ்ந்திருக்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

இது வெற்றியுமல்ல, அவர்களின் போராட்டத்தின் காரணமாக கிடைத்ததும் அல்ல. அவரால் தேர்தலுக்காக நடத்தப்படுகிற நாடகம் இது. அவரது ஆரம்பகாலக் கோரிக்கை என்ன என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். ‘வன்னியர்களுக்கு, மத்தியில் 2 சதவீதத்தையும், மாநிலத்தில் 20 சதவீதத்தையும் வென்றெடுக்காமல் என் கட்டை வேகாது’ என்று சொல்லிப் போராட்டத்தை ஆரம்பித்தவர் ராமதாஸ். ஆனால், தன் மகனை எப்போது மத்திய அமைச்சர் ஆக்கினாரோ அப்போதே மத்தியில் 2 சதவீத கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார். அதேபோல சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவோடு மாறிமாறி கூட்டணி வைத்தபோது மாநிலத்தில் 20 சதவீத கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டார்.

x