ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த குஷ்பு, அரசியலிலும் ஒரு முழுச்சுற்று வந்திருக்கிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகச் சுழன்று கொண்டிருந்த குஷ்புவிடம், சர்வதேச மகளிர் தினத்துக்காகப் பேசினோம். பரபரப்பான பணிகளுக்கு நடுவே நமது அத்தனை கேள்விகளுக்கும் தயக்கமின்றி பதிலளித்தார்.
சினிமா, சின்னத்திரை, அரசியல் என கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கின்றீர்கள். உங்களின் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தன?
சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகை ஹேமமாலினி அவர்களின் தாய். அப்படியொரு உச்சபட்ச அந்தஸ்து கொண்டவரின் சிபாரிசுடன் சினிமாத் துறைக்குள் கால்பதித்ததால், சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது. எனது 15-வது வயதில், தெலுங்கில் டி.ராமநாயுடு அவர்களின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலமாகத்தான் முதன்முதலில் தென்னிந்தியத் திரைப்படத் துறையில் அறிமுகம் செய்யப்பட்டேன். அதன்பிறகு, ஸ்ரீ ஈஸ்வரி புரொடக்ஷன்ஸ் வீராசாமி அவர்களால் கன்னடத்தில் அறிமுகம் செய்யப்பட்டேன். எஸ்.பி. முத்துராமன் அவர்களால் தேவர் பிலிம்ஸில் 17-வது வயதில் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டேன். இந்த மூன்று நிறுவனங்களும் பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்துபவை. அதனால், வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்போடு என்னை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். நான் தொடங்கியது பெரிய இடம் என்பதால், அடுத்தடுத்து வாய்ப்புக் கொடுத்தவர்களும் அதே மரியாதையோடு என்னை நடத்தினார்கள்.