ரஜினி சரிதம் 12: ஆறிலிருந்து எழுபது வரை: திரும்பத் திரும்ப ரீ-டேக்!


கலாகேந்திரா அலுவலகத்துக்குப்போய் மேக்-அப் மேன் சுந்தரமூர்த்தியை தேடினார், சிவாஜி ராவாக இருந்த ரஜினி. “ப்ராப்பர்ட்டி ரூமில் போய் பாருங்கள்” என்று கைகாட்டினார் ஆபீஸ் பாய். எங்கும் பெட்டிகளின் குவியல். பழைய, பயன்படுத்திய பொருட்களின் வீச்சம்! அதற்குள் இருந்து, “மிஸ்டர் நீங்க யாரு?” என்றது ஒரு குரல்.

தன்னைவிட வயதில் குறைந்த மேக்-அப் மேன் சுந்தரமூர்த்தியை அப்போதுதான் பார்க்கிறார் ரஜினி. “நான் தான் சிவாஜி ராவ்” என்றார். “இப்படி பக்கத்துல வாங்க மிஸ்டர்” என்று அழைத்தார் சுந்தரமூர்த்தி. “என்னை நீங்க சிவாஜின்னே கூப்பிடலாம்... நான் சாதாரண ஆள்” என்று சொன்ன ரஜினியை, சற்றே ஆச்சரியமாகப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

தன்னருகில் மூன்று கோட்டுகளை வைத்துக்கொண்டு நின்றிருந்த டைலரிடமிருந்து ஒவ்வொன்றாக வாங்கி, ரஜினியின் தோள்கள் மீது வைத்து அவருக்கு அளவு பொருந்துகிறதா என்று பார்த்தார் மேக்-அப் மேன். ரஜினியின் தோள் அளவுகளுக்கு ஒரு கோட் பொருந்தியது. ஆனால், இடுப்பைத் தாண்டும் அதன் நீளத்தைப் பார்த்த ரஜினி, அதைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா என்று மனதுக்குள் எண்ணியபடி அப்படியே மவுனமாக இருந்துவிட்டார்.

“இதை ஒருமுறை போட்டுப் பார்த்துடுங்க சிவாஜி” என்றார் மேக்-அப் மேன். ரஜினியும் அந்தக் கோட்டை வாங்கி தான் அணிந்திருந்த சட்டை மீதே போட்டுப் பார்த்தார். தோள் அளவுகள் பொருந்தினாலும் தொளதொளவென்று இருந்தது. “டைரக்டர் சொன்னமாதிரி இருக்கு... நாளைக்கு ஷூட்டிங். கிளீன் ஷேவ் பண்ணிட்டு லொக்கேஷன் வந்துடுங்க... தாடி ஒட்டணும். இருங்க அளவு எடுத்துகிறேன்” என்ற சுந்தரமூர்த்தி, நூலை எடுத்து ரஜினியின் மோவாய், கண்ணங்களை அளந்து அவற்றில் முடிச்சுப் போட்டுக்கொண்டார். இது என்ன வித்தியாசமான அளவாக இருக்கிறதே என்று நினைத்துகொண்டார் ரஜினி.

சுந்தரமூர்த்தியைச் சந்தித்துவிட்டு கலாகேந்திராவிலிருந்து புறப்படும் முன் அசோசியேட் டைரக்டர் சர்மாவைப் பார்த்துவிட்டார் ரஜினி. “நாளைக்குத் தொடங்குற ஷெட்யூல்ல உங்க இன்ட்ரோ சீனை டைரக்டர் எடுக்கிறார். அடையாறு கிரெசென்ட் பார்க் ரோட்ல ஒரு வீடு. கம்பெனி கார் வரும். அதுல வந்துடுங்க” என்றார்.

மறுநாள் கேமரா முன்பாக நிற்கப்போகிறோம் என்று நினைத்தபோது ரஜினியைப் பதற்றத்துடன் கூடிய சந்தோஷம் தொற்றிக்கொண்டது. இரவு முழுவதும் தூக்கமில்லை. காலை 4 மணிக்கு எழுந்து, குளித்து, ஷேவ் செய்து 5 மணிக்கெல்லாம் தயாராக இருந்தார். 5.45 மணிக்கு கம்பெனி கார் வந்தது. அதில் ஏற்கெனவே முன்றுபேர் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் துணை நடிகர்கள். ரஜினியை முன்னால் உட்காரச் சொன்னார் காரின் ஓட்டுநர்.

அடுத்த அரைமணி நேரத்தில் அடையாறு பகுதியில் இருந்த ‘செட்டியார் பங்களா’ என்கிற அதிநவீன வீட்டின் முன்புபோய் கார் நின்றது. அங்கே போனதுமே ரஜினியை இயக்குநரிடம் அழைத்துச் சென்றார் சர்மா. ரஜினி, கேபி சாரைப் பார்த்து, “நமஸ்காரம் சார்...” என்று இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார். “வணக்கம் மிஸ்டர் சிவாஜி... வெல்கம் டூ கலாகேந்திரா டீம்” என்றார். அவரது குரலில் அப்படியொரு எனர்ஜி. சர்மாவைப் பார்த்து, “சிவாஜியை ரெடி பண்ணி வைச்சுக்கோங்க... கமல் - ஸ்ரீவித்யா கம்பினேஷன்ஸ் முடிஞ்சதும் சிவாஜிக்கு இன்ட்ரோ எடுத்துடலாம். ஷிஃப்ட்டிங் பண்ண 45 நிமிசத்துக்குமேல எடுக்கக் கூடாது பார்த்துக்கோங்க” என்றார் கே.பி.

மறக்க முடியாத தாடியும் கோட்டும்

கமல் - ஸ்ரீவித்யா காட்சிகள் படமாகிக்கொண்டிருந்த அந்த பங்களாவின் தரைத் தளத்தில் இருந்த ஓர் அறையில் ரஜினியை அமரவைத்து, அவரது முகத்தில் ஆல்கஹால் வாசனை வீசிய பசையைத் தடவினார் மேக்-அப் மேன் சுந்தரமூர்த்தி. பசை காய்வதற்கு 30 நோடிகள் அவகாசம் கொடுத்தவர், ஏற்கெனவே அளவெடுத்து தயாரித்து வைத்திருந்த தாடியை ரஜினியின் கன்னங்களில் கச்சிதமாக ஒட்டி, கைகளால் கண்ணத்தில் தப்... தப் என்று தட்டினார்.

“கொஞ்ச நேரத்துக்கு விறுவிறுன்னு இருக்கும், அப்புறம் பழகிடும் சிவாஜி... ஒரு தம் போடலாமா?” என்றார் சுந்தரமூர்த்தி.
ரஜினிக்கு, அப்பாடா... என்று இருந்தது. அந்த தற்காலிக மேக் - அப் அறைக்குள்ளேயே இருவரும் நிலக்கரி இன்ஜினாக மாறி ஊதித் தள்ளினார்கள். ‘இன்ஸ்டிடியூட்ல படிச்சு வந்திருக்கீங்க... பதற்றத்தைக் குறைச்சுக்கோங்க...” என்றார் சுந்தரமூர்த்தி. பிறகு, ரஜினிக்கு ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த அந்த நீளமான தொள தொள கோட்டைப் போட்டுவிட்டார்.

கோட்டிலிருந்து வந்த மணம் ரஜினிக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அந்தக் கோட்டை கடைசியாக எப்போது துவைத்து சலவை செய்தார்கள் என்றே தெரியவில்லை. இன்னொரு பக்கம், சிரித்தாலோ, கன்னங்களை அசைத்தாலோ தாடி ஒட்டப்பட்ட ஏரியாவில் ஆங்காங்கே சுருக், நறுக்கென்று குத்தியது. வேறு வழியில்லை... ரஜினி காத்திருந்தார். திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று நாட்கள் ஓடியேவிட்டன. ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்படவில்லை. நான்காவது நாளான வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு, செட்டியார் பங்களாவிலிருந்து கிரெசென்ட் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு படக்குழு ஷிஃப்ட் ஆனது.

அதே தாடி, அதே கோட்டை நான்காவது நாளாக அணிந்திருந்த ரஜினியை ஒரு கம்பீரக் குரல் அழைத்தது. “சிவாஜிய கூப்பிடுங்கப்பா...” என்று கேபி அழைத்ததுமே, ஓடிவந்து நின்றார் ரஜினி. அவரிடம் “ நீ இரும்பு கிரில் கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே வரவேண்டும்... ரைட் டூ லெஃப்ட் தலையை மட்டும் அசைச்சு இது உன்னோட இடம்கிற உரிமையோட ஒரு லுக் விடணும். முகத்தில ஒரு தேடலும் களைப்பும் இருக்கணும்” என்று சொல்லிவிட்டு, “எங்கே ஒருமுறை நான் சொன்னதை செய்ங்க பார்க்கலாம்” என்றார் கே.பி. இரண்டு கைகளாலும் ஸ்டைலாக கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த ரஜினி, கே.பி சொன்னதுபோல் செய்து காண்பித்தார். “அவ்வளவுதான் சிவாஜி... ஃபர்பெக்ட். டேய் ஜப்பான் ... கிளாப்” என்று தனது உதவியாளரைப் பார்த்து, உற்சாகக் குரல் கொடுத்தார் கே.பி.

எங்கிருந்தோ ஓடிவந்த கிளாப் அசிஸ்டென்ட், ரஜினி நுழையவிருக்கும் கேட்டுக்கு முன்னால் நின்று கிளாப் போர்டை கேமராவுக்கு சாதகமான கோணத்தில் பிடித்தார். “ஸ்டார்ட் கேமரா... கிளாப்...” என்று கே.பி கத்தியதும், ரஜினிக்கு கைகால் நடுங்கிவிட்டது. ‘பட்’ என்கிற கிளாப் சத்தம் ரஜினியை இன்னும் உசுப்பியது. கிளாப் அடித்த உதவி இயக்குநர் சட்டென்று விலகி ஓடியதும், அடுத்து இயக்குநர் “ஆக்‌ஷன்...” என்று கத்தினார். அந்தச் சத்தம் ரஜினியை ஒரு நொடியில் அசைத்துப் பார்த்துவிட்டது. ஒத்திகையில் செய்து காட்டிய நடிப்பில் பாதியைத்தான் ரஜினியால் செய்ய முடிந்தது. ஆனாலும் “ஷாட் ஓகே” என்று ரஜினியை கூல் செய்தார் கே.பி.

கமல், நாகேஷின் பாராட்டு

அடுத்து கமலைப் பார்த்து, “பைரவி வீடு இதுதானே?” என ரஜினி திரையில் பேசிய முதல் வசனக் காட்சி படமாக்கப்பட்டது. இந்த வசனத்தை கன்னட உச்சரிப்புடன் சொல்லி நடித்தார் ரஜினி. அந்தக் காட்சியின் அனைத்து ஷாட்களும் எடுத்து முடிக்கப்பட்டதும் 
கே.பி.யின் முகத்தைப் பார்த்தார் ரஜினி. தனது நடிப்பு அவ்வளவு சிறப்பாக வெளிப்பட வில்லை என்பதை அவரது முகத்தை வைத்தே தெரிந்துகொண்டார்.

அடுத்தடுத்து வரும் காட்சிகளில் இன்னும் நன்றாக, இயல்பாக நடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, ரஜினியின் அருகில் வந்தார் கமல். “நல்லாவே நடிக்கிறீங்க பிரதர்... வித்தியாசமா இருக்கு. வெல்” என்றார். ரஜினிக்கே இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. நடிப்பில் வெளுத்து வாங்கும் கமலைப்போல் எப்போது நாமும் நடிக்கப்போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதுதான், ஆன் தி ஸ்பாட் ரஜினியை மனம் திறந்து பாராட்டிவிட்டு அடுத்த ஷாட்டில் நடிக்கத் தயாரானார் கமல்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினி அறிமுகமானபோது நாகேஷ், கமல், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன் ஆகிய நால்வருமே நட்சத்திரங்களாகப் புகழ்பெற்றிருந்தார்கள். அறிமுகப் படத்திலேயே நாகேஷுடன் நடிப்போம் என்று ரஜினி கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நாகேஷ் நடித்து முடித்து கிளம்பும்போது ரஜினியை அருகில் அழைத்தார்: “பிரில்லியன்ட் சிவாஜி... இப்படித்தான் வித்தியாசமா பண்ணணும். பிரபலமான நடிகர்களோட சிறு சாயல் கூட நம்ம நடிப்புல தெரிஞ்சா காணாமப் போயிடுவோம். கீப் இட் அப்” என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார்.

ரஜினியால் நம்ப முடியவில்லை. ‘எதிர்நீச்சல்’ படம் பார்த்து நாகேஷை தனது மாஸ்டர்களில் ஒருவராக மனதில் வரித்துக்கொண்டிருந்தார். அவரது மனம் திறந்த பாராட்டு, ரஜினியின் தன்னம்பிக்கையை பல மடங்கு கூட்டியிருந்த நேரத்தில்தான், ஸ்ரீவித்யாவுக்கும் ரஜினிக்குமான காதல் காட்சிகளைப் படம் பிடித்தார் கே.பி. ஒரு பெண் நடிகருடன் நெருக்கமாக நடிக்கவேண்டும் என்றபோது ரஜினிக்கு பழையபடி டென்ஷன். அதனாலேயே ஒவ்வொரு ஷாட்டிலும் கணக்கு வழக்கு இல்லாமல் ரீ-டேக்ஸ் வாங்கிக்கொண்டேயிருந்தார் ரஜினி.

படங்கள் உதவி: ஞானம்

(சரிதம் பேசும்)

x