பிரதமர் பதவிக்கும் எங்க கட்சி வரும்!- அசராமல் பேசிய அனில்குமார் ஓஜா


கே.சோபியா
readers@kamadenu.in

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை ஓபிஎஸ் தாக்கல் செய்த அதேநேரத்தில், மதுரையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அனில்குமார் ஓஜா. “மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும்” என்று ஓபிஎஸ் அறிவித்தபோது, “அந்தக் கடனை 5 வருடத்தில் நான் ஜீரோவாக்கிக் காட்டுகிறேன்” என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார் ஓஜா.

யாரந்த ஓஜா என்கிறீர்களா? டிவி, எஃப்எம், தினசரிகள் மட்டுமில்லாமல், யூடியூப் வீடியோவைத் திறந்தாலும், “போதும் போதும் ஏமாந்தது போதும்... அடுத்த 5 ஆண்டுகளில் வரியில்லாத தமிழ்நாடு... வாக்களிப்பீர் மை இந்தியா கட்சி!” என்றொரு விளம்பரம் வருமே, அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் தான் இந்த ஓஜா.

நானும் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ‘தங்கம் கிராண்ட்' எனும் பெரிய ஹோட்டலில் ஒரு மினி ஹாலை புக் செய்திருந்தார்கள். அதிகபட்சம் 100 பேர் உட்கார முடிந்த அந்த அரங்கில், மொத்தமே 20 பேர் தான் இருந்தார்கள். கையில் ஃபைல் சகிதமாக உட்கார்ந்திருந்த ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தேன். “என் பெயர் மகேந்திரன். ஊர் திருக்குவளை. டபுள் எம்.ஏ., எம்எஸ்டபிள்யு படித்துவிட்டு சமூகசேவை செய்யும் நான், இதுநாள்வரையில் சகாயம் ஐஏஎஸ்ஸின் மக்கள் பாதை இயக்கத்தில் இருந்தேன். அவர் கட்சி தொடங்கத் தாமதமாவதால், மக்களுக்குச் சேவை செய்வதற்காக இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன்” என்று சொன்னார். வந்திருந்த 20 பேருமே,‘அவரைப் போலவே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கேட்டு வந்திருப்பதாகவும், டெபாசிட் தொகையையும் தலைவரே கட்டிவிட்டால் மகிழ்வோம்’ என்றும் சொன்னார்கள்.

x