அரசின் கடன் சுமை மக்களை பாதித்துவிடக் கூடாது!


தமிழகத்தின் மொத்தக் கடன் அளவு, 2022 மார்ச் மாதத்தில் 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது. இது, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் இதே நிலைதான் நீடிக்கிறது. 2005-06-ல் 56,094 கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு, இன்றைக்குப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் நிதிநிலையைத் தமிழக அரசு கையாள்வதுதான் இதற்குக் காரணம் என்றே கருத வேண்டியிருக்கிறது. வரி வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். போதாக்குறைக்கு, கரோனா பெருந்தொற்றுப் பரவல், பொதுமுடக்கம் எனப் பல்வேறு இடர்ப்பாடுகள் மாநிலத்தின் வருவாயில் தேக்கத்தையும், கடன் வாங்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்திவிட்டன.

மேலும், மத்திய அரசிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பேரிடர் நிவாரணத் தொகை உள்ளிட்ட உரிமைகளை உரிய அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் பெறவும் தமிழக அரசு தவறிவிட்டது என்றும் அதிருப்திக் குரல்கள் ஒலிக்கின்றன.

இது எளிதாகக் கடந்துசெல்லக்கூடிய விஷயமல்ல. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசு அமைந்தாலும், இதே அரசு தொடர்ந்தாலும் இந்தப் பிரச்சினையின் தாக்கத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை சாமானியர்களுக்குச் சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வருவதும் அரசுக்குச் சவாலான விஷயமாக மாறினால், அதன் விளைவையும் மக்களே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிதிநிலையை மிகுந்த பொறுப்புடன் கையாள வேண்டும் எனும் பாடத்தைப் பெரும் விலை கொடுத்துப் படிக்க வேண்டிய சூழல், இனியும் தொடரக்கூடாது!

x