தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வந்தால் போதுமா?- விஜயதரணிக்கு எதிராக விறுவிறு காங்கிரஸ்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி ஆயத்தமாகிவருகிறார். ஆனால், அவரது கனவை கலைக்கும்விதமாக அவரது கட்சியினரே அவருக்கு எதிராக முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். கட்சிக்குள் தரணிக்கு எதிராக அரசல்புரசலாக இருந்த அதிருப்திக் குரல்கள், தற்போது பகிரங்கமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

சங்கடப்பட்ட அழகிரி

குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான கூட்டங்களில் இப்போது விஜயதரணியின் பெயர் தொடர்ந்து தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால், தவிர்க்க முடியாமல் விஜயதரணியின் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்
திருந்தனர். எனினும், அவருக்கு எதிரான கட்சிக்காரர்களின் கசப்புணர்வு, நிகழ்ச்சி மேடையில் வெளிப்படையாக வெடித்தது.
விஜயதரணி பேச மைக்கைப் பிடித்ததும், அவரைப் பேசவிடாமல் சிலர் கூச்சல் எழுப்பினர். இதனால் டென்ஷன் ஆன விஜயதரணி, “கூட்டத்துக்குள் புல்லுருவிகள் புகுந்துவிட்டனர். மாநிலத் தலைவர் இதைக் கண்காணிக்க வேண்டும்” என்று கொந்தளித்தார். கூச்சல் போட்டவர்கள் தாங்களாகவே அமைதியான பின்னரே, பேசத் தொடங்கினார் விஜயதரணி.

x