இருளில் மூழ்கிய எத்தியோப்பியா!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

எத்தியோப்பியா என்றதும் நம் நினைவுக்கு வருவது எலும்பும் தோலுமான குழந்தைகளின் பரிதாபத் தோற்றம்தான். 1980-களின் தொடக்கத்தில் கடும் வறட்சியில் சிக்கித் தவித்த நாடாக உலகின் பார்வையில் பரிச்சயமான நாடு எத்தியோப்பியா. வன்முறை, உள்நாட்டுப் போர், பஞ்சம் என ஒரு நாடு எதிர்கொள்ளக்கூடாத அத்தனை அவலங்களையும் எதிர்கொண்டு, ஒருவழியாக மீண்டுவந்து கொண்டிருக்கும் எத்தியோப்பியாவில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் சம்பவங்கள் பதைபதைக்க வைக்கின்றன.

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டிக்ரே பிராந்தியத்தில் நாள்தோறும் படுகொலைகள் நடக்கின்றன. பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். சாப்பிட வழியில்லாமல் இலை தழைகளைப் பிய்த்துத் தின்னும் நிலையில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். உயிர் தப்பியவர்கள் அண்டை நாடான சூடானில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்த அவலங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமது அலியின் மேற்பார்வையில், அத்தனையும் நிகழ்ந்து வருகிறது என்பதுதான் மிகப் பெரும் துயரம். மிகவும் சிக்கலான அரசியல், சமூகக் கூறுகளைக் கொண்ட எத்தியோப்பியாவின் வரலாற்றில் இன்னொரு இருள் யுகமாகவே இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.

x