ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
பாலியல் புகாரில் சிக்கிய பாஜக முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில், பத்திரிகையாளர் பிரியா ரமணி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்துவிட்டது. இந்தியாவில், ‘மீ டூ இயக்க’த்துக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி என்று தான் இதைச் சொல்ல வேண்டும்.
இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் இணைஅமைச்சர் எம்.ஜே.அக்பர் இதழியலாளராக பணியாற்றிய காலத்தில், அவருடன் பணிபுரிந்தவர் பத்திரிகையாளர் பிரியா ரமணி. 20 ஆண்டுகளுக்கு முன் அக்பருடன் பணியாற்றியபோது, தனக்கு அவர் பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்ததாக 2018-ல் சமூக ஊடகத்தில் பிரியா ரமணி பதிவிட்டிருந்தார். “இந்த நபரால் பலரும் பாதிக்கப்பட்
டுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்வார்கள்” என்றும் தன்னுடைய பதிவில் பிரியா அப்போது எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்களும் அக்பரால் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாகப் புகார் அளித்தனர்.
தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டு களையும் அக்பர் மறுத்தார். தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவித்ததாகப் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கையும் தொடர்ந்தார். இதனிடையே அக்பர் மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பெண்களும் மகளிர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே, அக்பர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.