கட்டக்காளை - 10


பாசம் வைக்கிறதுக்கும், அரவணைக்கிறதுக்கும், கணக்குப் பாக்காம வாழ்ற ஊருல... கெடுதல் பண்ற வேலையை செய்யிறதுக்கின்டே ஒரு கூட்டம், இருக்கத்தான் செய்யிது.

ஒருத்தன ஏன் கெடுக்கிறோம், எதுக்கு கெடுக்கிறோமின்ற காரணமேயில்லாம, பல குடும்பத்தில கம்பெடுத்து போடுறவெங்களும் இருக்கத்தான் செய்யிறாங்க.

தேன்ராடு கெணக்கா, ‘கரு கரு'ன்டு தெரண்டிருந்த மேகம், இருட்டுக்கட்டிக்கி நிக்கிது... சொழட்டி அடிச்ச காத்து, மரமட்டைய உலுக்கியெடுத்து செத்தநேரத்தில சோ...ன்டு மழை ஊத்த ஆரம்பிச்சிருச்சு.

"ஏய்...வீரனா... யேலே..." கழிச்சியாத்தா வாசல்ல நின்டு கூப்பிடுறா. அவ கூப்புடுற சத்தம் வீரனனுக்கு கேட்டாலும்... ‘கன கன’ன்டு தாம் பொண்டாட்டிய அணைச்சுப் படுத்துக் கெடந்தவனுக்கு, பதிலுச் சொல்ல மனசில்ல… அன்னத்தாயோட மூச்சுக் காத்து மூளையக் கொழப்ப, பாம்பு கெணக்கா பின்னிப் பெணஞ்சு கெடக்கான் வீரனன்.

"அடியே அன்னத்தாயி... எங்கடி அவென, இருக்கான..?" கழிச்சியாத்தா ரெண்டாவது கேட்டதுக்கும் பதுலில்ல. “அடியே…” இன்னஞ்சத்தமா கூப்புட்டா. “இதுக்கும் மேல பதிலுப் பேசலன்டா சண்டைக்கு வந்திருவாள்”ன்டு சொல்லிக்கிட்டே… சீலய சுருட்டி மேல்லப் பொத்திக்கிட்டு எந்திரிச்சா, வீரனன் பொண்டாட்டி அன்னத்தாயி.

"எந்திரிய்யா… ஆத்தா கூப்புட்டுக்கிருக்கு என்னான்டு கேளு, ப்போ..."ன்டு சொன்ன அன்னத்தாயிக்கு உள்ளுக்குள்ள, இன்னஞ் செத்த நேரம், கூட இருக்கணுமின்ட ஆசை.

வேட்டிய கழத்தி மடிச்சுக் கட்டிக்கிட்டு ஒறக்கச்சாடையில வாரதுமாரியே வீட்டுக்குள்ளருந்து வெளியில வந்தான் வீரனன்.
“இந்நேரத்திலயே எளந்தாரிக்கு அப்புடி என்னாடா ஒறக்கம்..?”ன்டு கேட்ட கழிச்சியாத்தா, வீரனன் மூஞ்சியப் ஏற்ட்டுப்பாத்து, “கஞ்சிகுடிச்சிட்டியாடா…”ன்டு கேட்டா… “ம்..”ன்டு மண்டயாட்டுனான்.

“ஓனாப்பட்டிக்குப் போன கட்டக்காளையும், ஒச்சுக்காளையும் இன்னந் திரும்பல. அங்கனெயே தங்கிட்டாங்க போல…”ன்டு சொன்ன கழிச்சியாத்தா, “அப்பிய மாத்தையில பெய்ய வேண்டிய மழை, முன்னக்கூட்டிய பெய்யிது… மழத்தண்ணிய குண்டு குண்டுக்குத் தேக்கி வச்சமின்டா… நெல்லு நடுறதுக்கு தோதா தொழியடிச்சிப்பிடலாம். மழ பெருசாருக்கு… அம்புட்டு வெரசா விடாதுடா… வரப்பு வாய்க்கால ஒடப்பெடுக்காமப் பாக்கணும்..." மழ பெய்யிற போக்கப் பாத்தே, வலுத்த மழையா இல்லையான்டு முன்னக்கூட்டியே எச்சரிச்சா.

“சாவடங்கி, அம்போதி எங்க இருக்காங்கென்டு பாத்து, அவிங்களயும் கூட்டிக்கிப் போடா..." கழுச்சியாத்தா சொன்னா.
அன்னத்தாயி நெனப்பிலயே வேண்டா வெறுப்பா மம்புட்டிய எடுத்துக்கிட்டு கெளம்புன வீரனன்கிட்ட... அரிக்கேன் வெளக்க எடுத்துக்காந்து குடுத்தா அன்னத்தாயி.

“அடிக்கிற காத்துக்கு, வெளக்கு அமந்துப் போகும்… வேணாம்” ன்டு சொல்லிட்டே மம்புட்டியெடுத்துக் கிட்டு, சாக்க மடிச்சு கொங்காணி போட்டுக்கிட்டு கெளம்பிட்டான்.

நல்லா இருட்டிருச்சு… நாலா பக்கமும் இடி இடிக்கிது. அம்போதி வீட்டுக்குப் போறதுக்கெல்லாம் சடசடன்டு பேஞ்ச மழத்தண்ணி, தெருவில வெள்ளங் கெணக்கா ஓட ஆரம்பிச்சிருச்சு.

தோட்டத்துக்குப் போற வழியிலதான் அம்போதி வீடு. ஒட்டுத் திண்ண வச்சு கட்டுன தரகிலமேஞ்ச கூரவீடு, மழைக்கும் பனிக்கும் எதமா… கன கனன்டு இருக்குமின்றதனால, வெள்ளனாவே வீட்டுக்குள்ள மொடங்கிட்டாங்க. ஆளு அரவமே இல்ல.
மழையில நனைஞ்ச மேனிக்கி, அம்போதி வீட்டு வாசல்ல குறுகிப் படுத்துக்கெடந்த நாயி, மண்டயெத் தூக்கமாட்டாம தூக்கி உருமுது.

அது கதவில்லாத வீடு. விறு விறுன்டு வீட்டுக்குள்ள போன வீரனன், திண்ணையில படுத்துக் கெடந்த அம்போதிய தட்டி உசுப்பி, “எந்திரியப்பா... தோட்டத்துக்குப் போகணும். குண்டுத் தண்ணியெல்லாம் ஒடஞ்சு, கெடமாடு அமத்துன எருவெல்லாம் வீணாப் போயிருமின்டு கெழவி கத்துது… வா"ன்டு சொன்னான் வீரனன்.

ரெண்டு பேரும் பேசிக்கிட்டே தோட்டத்துக்கு கெளம்பிட்டாங்க.
ஆலங்கட்டி கெணக்கா, ‘சட்டுச் சட்டு’னு மழத்தண்ணி விழுந்து தெறிக்கிது.

“வலுத்த மழையாருக்கே… செத்தவடத்தில ஓட ஒடப்பில வெள்ளம் வந்திரும் போல”ன்டு ஒருத்தர் மாத்தி ஒருத்தரு சொல்லிக்கிட்டே மின்னலு வெளிச்சத்தில நெதானமா தோட்டத்துக்கு வந்துட்டாங்க.

தோட்ட வீட்டுல சாவடங்கி படுக்கையப் பாத்தாங்க காணோம்…
“ஏய்... சாவடங்கியேய்” வீரனன் சத்தமாக் கூப்பிட்டான்.

“வாங்கடாய்ய்...” ஒத்தாளா மண்ண வெட்டிப் போட்டு, வரப்ப ஒசத்திக்கிருந்த சாவடங்கி கூப்புட்டான்.

வீரனனும் அம்போதியும், குண்டுக்குள்ள எறங்குனாங்க. மொழங்காலுத் தண்ணி கெத்துக் கெத்துன்டு நெம்பி நிக்கிது.
மழை கடுசா பேஞ்சதால நெல்லு நட்டுப்புடலாமின்டு மெச்சுப்போன சனம்... ராத்தியோட ராத்தியா, சாக்கெடுத்து கொங்காணி போட்டுக்கிட்டு அவுகவுக நெலத்துக்குள்ள எறங்கி குண்டுக்குள்ள பெருகுன தண்ணியத் தேக்கி வைக்கிறதுல மெனக்கிடுது.
ஒத்தக் குண்டுலருந்து பெருகுன தண்ணி மத்த குண்டுக வழியா கெழக்காம வெளியேறி தந்தரையாப் போயிக்கிருக்கு.
குண்ட விட்டு தண்ணி வெளியேறாம, மண்ண வெட்டிப் போட்டு அடச்சாங்க. வாய்க்கால்லருந்த செத்தசெடிய ஒதுக்கி, எச்சாத் தண்ணிய தெப்பத்து பக்கம் திருப்பி விட்டாங்க.

மூஞ்சியல அடிக்கிற மழைத் தண்ணி கண்ணுக்குள்ளயும் வாயிலயும் வடிஞ்சு ஒழுகுது. வடக்குக் கடைசியலருந்து, தெக்க வரைக்கும் ஆளுக்கொரு பக்கம் வரப்ப சரிசெஞ்சுட்டு இருக்காங்க…

ஆரு எங்கன நிக்கிறாங்கன்டுறத... அடிக்கிற மின்னலு வெளிச்சத்திலதான் பாக்கமுடியிது.

"கெழக்கோரத்து வரப்ப ஒசத்திப் போடுங்கப்பாய்..." சாவடங்கி சத்தமா சொன்னது, மழச் சத்தத்தில கெழக்கு வரப்ப அடச்சிக்கிருந்த வீரனனுக்கு சரியாக் கேக்கல.

ஏறுட்டுப் பாத்தான்... கண்ண முழிச்சுப் பாக்க விடாத மழ, மூஞ்சியிலயே அடிக்கிது...
மூஞ்சியில ஒழுகிற மழத்தண்ணிய நொட்டாங் கையில தொடச்சுக்கிட்டே, செத்த தூரம் நகன்டு வந்த சாவடங்கி, “யேலே... வீரனா... எங்கிட்டுர்ற இருக்க? கெழக்கு வரப்ப தாக்காப் போடச் சொல்லு..."ன்டு சொன்னான்.

"ஆட்டுமப்பாய்..."ன்டான் வீரனன்.

சத்தத்த வச்சுத்தான் இன்னாருன்டுறத அடையாளங் காணமுடியுது. ஆளுக நிக்கிறாமாரித்தான் தெரியுது, இன்னாருன்டு சரியாப் பொலப்பட மாட்டுது.

 ‘த்திடு...டுடுடு....டும்...’ன்டு வானம் குமுறுற பெருஞ்சத்தத்தக் கேட்டு எல்லாருமே செத்தவடம் பயந்துட்டாங்க.
வானம் இடிக்கிறப்பெல்லாம், “அருச்சுணென் பேரு போற்றி”ன்டு வரப்ப வெட்டிப் போட்டுக்கிருந்தவங்களோடா வாயி தன்னால சொல்லுது.

வானத்தில தேரோட்டிக்கிப் போற அர்ச்சுணன் பேரச்சொன்னா, இடி தாம்மேல விழாம, வேற எடத்தில விழுந்துருமின்டு ஒரு நம்பிக்கை...

கமலையில தண்ணியெறச்சு, கையகல நெலத்துல மட்டுமே வெள்ளாம செஞ்ச சனம், குண்டு குறுக்குல பெருகி நிக்கிற தண்ணியப் பூராத்தையும் தேக்கி வச்சமின்டா... தொழியடிக்க தண்ணிக்கு செரமப்பட வேணாமின்டுதான் இடி மழையின்டும் பாக்காம வேல செஞ்சுக்கிருக்கு.

குதிரைவாலி, தெணை, வரகு, கேப்பை, சோளமின்டு வெள்ளாம செஞ்சு, அதையே கஞ்சியாக் காய்ச்சி குடிச்ச சனம், நெல்லுச் சோத்துக்கு ஏமாந்து போயி நிக்கிது.

சரியான தண்ணியில்லாம நெல்லு நடமுடியாம தவிச்சுப் போற சனத்துக்கு, எப்பயாச்சும் பேயாத மழை இப்படிப் பேஞ்சு அதுல வார தண்ணிதான் தெய்வமா தெரியும்.

மேக்க செல்லச்சாமி காட்டுல... கெழக்க செவசாமி காட்டுலன்டு ஆளாளுக்கு ஒரு குழி ,ரெண்டு குழி வச்சிருக்குவென் எல்லாம்… இந்தவாட்டியாச்சும் நெல்லுக் கஞ்சி குடிச்சிப்புடணுமின்டு, மம்பிட்டியும் ஆளுமா... மழைன்டும் பாக்காம இருட்டுக்குள்ள திரியிறாங்க.

அங்கங்க வரப்புலருந்த, எலிச்செலவுக்குள்ள தண்ணி பூந்து, கடும் வெசமுல்ல நட்டுவாக்கலி... பூரான், பாம்புன்டு எதேதோ சீவாத்தி தப்பிக்க வழி தெரியாம மொழங்காலுக்கு மேல போற தண்ணியில தத்தளிச்சுக்கிட்டு வருதுக.

வெசங்கக்குற பாம்பா இருந்தாலும், அது போற போக்குல விட்டுடோமின்டா எந்த தொந்தரவும் பண்ணாது. அப்படி வந்ததுகள மம்பிட்டிய வச்சு பொத்துனாப்பில வேற பக்கம் ஒதுக்கி தள்ளிவிட்டுட்டு, அவெங்க வேலய பாத்துக்கிருந்தாங்க.

நடுச் சாமமாகிப்போச்சு. கம்மா நெறஞ்சு, மறுகாத்தண்ணி வெளியேறி கொளங்குட்டை, காடு கரை, வாய்க்கா வரப்புன்டு, தளும்பத் தளும்ப தண்ணி நிக்கிது.

தண்ணிக்குள்ள நின்னுக்கிருந்த வரைக்கும் குளுரு தெர்ல. வேலய முடிச்சு, கைகாலக் கழுவிட்டு, மேடேறி தோட்டத்து வீட்டுக்குள்ள வந்தவங்களுக்கு குளுர ஆரம்பிச்சுருச்சு…

அம்போதி குளுர்ல்ல ரொம்ப நடுங்க ஆரம்பிச்சுட்டான்.

கொஞ்சம் வெறக எடுத்துக்காந்து, கூதக்காயிறதுக்காக தீமூட்டிவிட்டான் சாவடங்கி.

“விடியமின்ன கொளத்துப்பட்டியிலருந்து பத்து ஏரப் பூட்டிக்காந்து, ஒரே விசயில உழுதுப்பிடணுமிடாய்…” வீரனன் சொன்னான்.
ஓனாப்பட்டிக்கு போன கட்டக்காள வாரதுக்குள்ள உழுது, பேரு வாங்கணுமின்டு… ஆளுக்கொரு ஓசனையச் சொல்லிப் பேசிக்கிருந்தாங்க.

மழையில வேல செஞ்ச அலுப்பும், கூதக் காஞ்ச கனகனப்பும் சேர்ந்து கண்ணச் சொக்க, பேசிக்கிருந்த வாக்குலயே அசந்து ஒறங்கிட்டாங்க.

பொழுது பரிஞ்சது கூடத்தெரியாம படுத்துக் கெடந்தவங்க, தோட்டத்துக்கு வடக்க, கம்மாக் காட்டுல ‘கேகே’ன்டு சத்தம் கேட்டு எந்திரிச்சு வெளிய ஓடியாந்தாங்க.

வடக்க கண்ணுக்கெட்டுன தூரம்… தெப்பலா கெடந்த தண்ணி, இப்ப ஒத்தப் பொட்டுல்லாம வத்திப் போயிக் கெடந்ததப் பாத்ததும் அம்புட்டுப் பேருக்கும் திக்குன்டுருச்சு.

வீரனனும் சாவடங்கியும் ஆளுக்கொரு தெசயில ஓடிப்போயி, வரப்ப பாத்தாங்க.

மழைத்தண்ணி வெளியேறாம, தாக்கா ஒசத்திப் போட்டிருந்த வரப்பில, அங்கங்க ஒடச்சுருக்கிறதப் பாத்து,… யாரோ ஒடச்சு விட்டுருக்காங்கன்டு, நெனச்சு விக்கிப் போயி நின்னுட்டாங்க.

செல்லச்சாமி, செவசாமி, பொன்னுச்சாமின்டு, அம்புட்டுப்பேரு நெலத்திலயும் ஒத்தப் பொட்டு தண்ணியில்ல…
ஆளாளுக்கு, வரப்பில நின்டு கத்திப் பொழம்பிக்கிருங்காங்க…

“அம்புட்டுத்தாக்காப் போட்டிருந்த வரப்பு, அம்புட்டுச் சாமானியமா ஒடையாதப்பா…. எப்புடி ஒடையும்..? ஆரோ ஒடச்சு விட்டுருக்காங்க… எதோ சதி நடந்திருக்கு…”ன்டு ஆளாளுக்கு ஒவ்வொரு வெதமா ஓசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

(தொடரும் )

x