20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயல்வடிவம் பெறத் தொடங்கிய செயற்கை நுண்ணறிவு பாதைக்கான மூல இழைகளில் ஒன்று, லீப்னிஸிடமிருந்து தொடங்கியதை அறிந்துகொள்ளும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.
பல்துறை மூலச் சிந்தனையாளர்களில் ஒருவரான லீப்னிஸ் பற்றி இன்னொரு முக்கியத் தகவலும் இருக்கிறது. நவீன கணினிகளின் இயக்கத்தின் அடிப்படையாக இருக்கும் பைனரி எனப்படும் இருமவழி எண்கள் கருத்தாக்கத்தை முன்வைத்த முன்னோடிகளில் ஒருவர் அவர். டிஜிட்டல் என அறியப்படும் பூஜ்ஜியம் (0) மற்றும் ஒன்று (1) ஆகிய இரும இலக்குகளைக் கொண்டு, எண்களைக் குறித்து மிக எளிதான குறியீடுகளை உருவாக்க முடியும் என அவர் விளக்கியிருக்கிறார்.
வாழ்நாள் லட்சியம்
லீப்னிஸின் மேதைமையைப் புரிந்துகொள்ள, கணினி துறையில் நவீன மேதைகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், சிந்தனைத் தானியங்கிமயமாக்கத்துக்கான கணினி மொழியை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருப்பவருமான ஸ்டீபன் வால்ஃப்ராம் (Stephen wolfram), அவரைப் பற்றி சொல்வதைக் கவனித்தாலே போதுமானது. “லீப்னிஸ் பல துறைகளில் செயல்பட்டார். ஆனால், கணினி கணக்கிடும் செயல்பாடாக மனிதச் சட்டத்தை மாற்றுவதற்கான இலக்கே அவரது சிந்தனைகளில் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டிருந்த கருத்தாக்கமாக இருந்தது” என வால்ஃப்ராம் குறிப்பிடுகிறார்.
நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்து உருவான மனிதச் சட்டம் அல்லது மனித விதிகளை, மனிதர்கள் உருவாக்கிய முதல் ஒருங்கிணைந்த விதிகளாகக் கருதலாம் என்கிறார் வால்ஃப்ராம். மேலும், இவற்றை அறிவியல் மற்றும் கணிதம் கொண்டு கணினிமயமாக்கலாம் என்பது இப்போது சாத்தியமாகத் தொடங்கியிருக்கிறது என வலியுறுத்தி இதற்கான ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாக லீப்னிஸின் சிந்தனைகளை வால்ஃப்ராம் முன்வைக்கிறார்.
சாத்தியமான சட்டக் கனவு
இதைச் சுட்டிக்காட்டுவதற்கான காரணம், அனைவரையும் வியப்பிலும், திகைப்பிலும் ஆழ்த்தும் செயற்கை நுண்ணறிவு என்பது, ஏதோ, திடீரென உண்டான சிந்தனை அல்ல என்பதை உணர்த்துவதற்காகத்தான். கணினி யுகத்தில்தான், இந்தச் சிந்தனை செயல்வடிவம் பெறத் தொடங்கியது என்றாலும், இதற்கான மூலச் சிந்தனை இழைகளை மனிதகுல வரலாற்றின் நெடுகிலும் நம்மால் பார்க்க முடியும். உழைப்பை மட்டும் அல்ல, சிந்தனை செயல்முறையையும்கூட மனித குலம் தானியங்கிமயமாக்கும் வழியை ஆதியிலிருந்தே தேடிக்கொண்டே இருக்கிறது.
அறிவியல், தர்க்கம், கணிதம் உள்ளிட்ட துறைகளின் உதவியோடு, கணினி மூலம் இந்தப் புதிரை விடுவிப்பதில் மனிதகுலம் வெகு தொலைவு முன்னேறி வந்திருக்கிறது. இந்த முன்னேற்றத்தை வேறு எந்தத் துறையையும்விட சட்டத் துறையில் தெளிவாக உணரலாம். அந்த வகையில் லீப்னிஸ் தொடங்கிவைத்த சிந்தனையில் பெரும் பாய்ச்சல், 20-ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் நிகழத் தொடங்கியது.
வழக்காடும் ரோபோ, செயற்கை சட்ட வல்லுநர் என சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு பிரிவுகளில் கிளைவிடத் தொடங்கியிருக்கிறது. இந்தப் போக்கில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுக்கு மிகவும் பொருத்தமான துறைகளில் ஒன்றாகச் சட்டம் அமைந்திருப்பதுதான். அது மட்டுமல்ல, குறுகிய நோக்கிலான செயற்கை நுண்ணறிவே மனிதகுலத்துக்கு இப்போதைக்குச் சாத்தியம் எனக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நோக்கிலான செயல்பாட்டில்தான் இயந்திரங்களால் மனிதர்கள் போலவே சிந்தித்துச் செயல்பட முடியும். மற்றபடி, பொது நோக்கிலான செயற்கை நுண்ணறிவு என்பது அறிவியலின் பெருங்கனவு!
எப்படி இயங்குகிறது?
இந்த அடிப்படைச் சிந்தனை, சட்டம் தொடர்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் பிரதிபலிப்பது வியப்பை அளிக்கலாம். ஆம், சட்ட விதிகளை இயந்திரமயமாக்கும் முயற்சி 1940-களிலேயே தொடங்கிவிட்ட நிலையில், இதற்கான முயற்சியில் ஈடுபட்ட முன்னோடிகள் மிகத் தெளிவாக, வரையறை செய்யப்பட்ட இலக்குடன் செயற்கை நுண்ணறிவை அணுகினர்.
அதாவது, இயந்திரங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று அவர்கள் கருதவில்லை. மாறாக, குறிப்பிட்ட சில விஷயங்களை இயந்திரங்களால் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும், முக்கியமாக நம்மைவிட சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் நம்பினர்.
ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு நீதிபதி அல்லது வழக்கறிஞர் தன்னிடம் உள்ள அனைத்து சட்ட நூல்களையும் படித்திருப்பார் என்று சொல்ல முடியாது. அது சாத்தியமும் இல்லை, நடைமுறையில் தேவையும் இல்லை. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான தகவல் அல்லது வரலாற்றுக் குறிப்பு தேவை என உணரும்போது, அந்த குறிப்பைப் புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்கும் ஆற்றல் இருந்தாலே போதும். ஆனால், இதற்கு வழக்கின் வரலாற்று பார்வையும், சட்டத்தின் ஆழமான புரிதலும் அவசியம்.
இயந்திரக் கற்றலின் ஆற்றல்
இந்த இடத்தில் கணினியின் அற்புத ஆற்றலைப் பொருத்திப்பாருங்கள். ஒரு வழக்கறிஞரின் அறையில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் கணினியில் ஏற்றிவிடலாம். இது டிஜிட்டல்மயமாக்கல் ஏற்படுத்திய சாதகம். டிஜிட்டல் வடிவில் இருக்கும் புத்தகங்களைப் படித்துப் (!) புரிந்துகொண்டு, அவற்றின் சாராம்சத்தை எடுத்துச்சொல்லக்கூடிய மென்பொருட்கள் சாத்தியம் என்பதை செயற்கை நுண்ணறிவின் அங்கமான இயந்திரக் கற்றல் சாத்தியமாக்கியிருக்கிறது.
இயந்திரக் கற்றல் ஆற்றல் கொண்ட மென்பொருட்கள் மூலம், சட்டப் புத்தகங்களை மின்னல் வேகத்தில் தேடிப்பார்த்து, வழக்குக்குத் தொடர்புடைய குறிப்புகளை எடுத்துக்கொள்வது சாத்தியமாகியிருக்கிறது. எனில், இந்த ஆற்றலை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என எதிர்பார்ப்பது இயல்புதானே. இதுதான், சட்டத் துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இயந்திரக் கற்றலின் இன்னொரு பிரிவான ஆழ்கற்றல் போன்ற நுட்பங்களால் இத்தகைய போக்கு இன்று சாத்தியமாகியிருக்கும் நிலையில், கணினிகளின் ஆரம்ப காலத்திலேயே சட்டத் துறையில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்பான வேட்கை தொடங்கிவிட்டது என்பதுதான் வியப்பளிக்கும் விஷயம்!
(தொடரும்)