முனைவர் என்.மாதவன்
thulirmadhavan@gmail.com
பதின்பருவத்தினரில் பலரும் எதிலும் பிடிப்பின்றி, அலட்சிய மனப்பான்மையுடன் இருப்பதைக் காண இயலும். இப்படிப்பட்டோரின் மனநிலையை மேலும் பலவீனமாக்குவதாக கரோனா பேரிடர் காலம் அமைந்துவிட்டது.
காலாண்டு அரையாண்டு தேர்வுகளுக்கான விடுமுறைகள் முடிந்து பள்ளி திரும்பும்போதே ஆசிரியர்களுக்கு மாணவர்களைக் கையாள்வது சவாலான விஷயமாக இருக்கும். இப்போது நீண்ட கரோனா விடுமுறைக்குப் பின்னர், 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். இவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பாடங்களைப் போதித்து தேர்வுகளுக்கும் தயார் செய்ய வேண்டும் என்பதை நினைத்தாலே ஆசிரியர்களுக்கு தலைசுற்றுகிறது.
இந்தச் சூழலில், 2005-ம் ஆண்டில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் திட்டம் நினைவுக்கு வருகிறது. மாணவர்களை மையப்படுத்திய கல்வித் திட்டம் வேண்டும் என்கிற சிந்தனைக்கு உயிர் கொடுத்தது செயல்வழிக்கற்றல் திட்டம். எண்ணற்ற அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின், அரசு அதிகாரிகளின் கனவுத் திட்டம் அது. ஆனால், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் பலரும் இந்தத் திட்டம் அமலானதை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்தத் திட்டத்துக்காக ஆசிரியர்களை தயார் செய்ததில் அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்ற பலவீனமே இதற்குக் காரணம். ஆசிரியர் தயாரிப்பு இன்னும் சரியாக இருந்து ஆசிரியர் சங்கங்களும் கூடுதலாக ஒத்துழைத்திருந்தால் இந்த திட்டம் இன்னும் அருமையாகச் செயல்பட்டிருக்கும்.