கரு.முத்து
muthu.k@kamadenu.in
பல்வேறு பாதிப்புகளால் பரிதவித்துக்கொண்டிருந்த தமிழக விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 2016-ம் ஆண்டிலிருந்து 2021 ஜனவரி 31 வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள 12,110.74 கோடி ரூபாய் கடன் தொகையைத் தள்ளுபடி செய்து அவர் பிறப்பித்த உத்தரவு, தமிழக விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இதன்மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டிருக்கும் குறுகிய கால பயிர்க் கடன்கள், விவசாய நகைக் கடன்கள் மற்றும் மத்திய கால கடனாக மாற்றியமைக்கப்பட்ட குறுகிய கால பயிர்க் கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்படுகின்றன.
புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றுடன் கரோனா காலம் உருவாக்கிய சவால்களாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள், முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதேசமயம், இந்தக் கடன் தள்ளுபடியால் அதிகம் பயன்பெறுபவர்கள் ஆளுங்கட்சிக்காரர்களும் அவர்களது உறவினர்களும்தான் எனும் விமர்சனமும் எழுந்திருக்கிறது.