எழுவர் விடுதலைக்கு விடிவு தான் எப்போது?


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் குரல்கள் தொடர்ந்து ஒலித்துவரும் நிலையில், அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் காட்டிவரும் அலட்சியமும், அரசியல் விளையாட்டுகளும் கேலிக்கூத்தாகவே இருக்கின்றன. 

இவ்வழக்கில் எழுவருக்கும் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்த நாள் முதல், அவர்கள் எப்படியும் விடுவிக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை வளரத் தொடங்கியது. இது தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்தது.

ராஜீவ் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைக் காரணம் காட்டி, இவ்விஷயத்தில் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார். ஆனாலும் இது தொடர்பான வழக்கில், இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமே விட்டுவிட்டது உச்ச நீதிமன்றம். ஆளுநரிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக இரண்டு ஆண்டுகள் கழித்து ஆளுநர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விஷயத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என்று இப்போது சொல்லும் ஆளுநர், இத்தனை நாட்கள் அதுபற்றி ஏன் பேசவில்லை என்பது முக்கியமான கேள்வி. இவ்விஷயத்தில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்பது குறித்து தமிழக அரசிடமும் தெளிவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த கருத்துகள் தொடங்கி எல்லாவற்றிலும் தெளிவின்மையும் திசைதிருப்பலும் இருப்பதை உணர முடிகிறது.

அரசியல் மாச்சரியங்கள், அதிகார வரம்புகள் என எல்லாவற்றையும் கடந்து மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயம் இது. இனியும் இந்த விவகாரம் இழுத்தடிக்கப்படுவது நியாயம் அல்ல. விரைவில் இந்த விஷயத்தில் இறுதித் தீர்ப்பு எழுதப்படட்டும்!

x