சமயம் வளர்த்த சான்றோர் 09: சுவாமி கேசவானந்த பாரதி


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

இந்து சமயத்தினருக்கான கல்வி நிறுவனமான எடநீர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சுவாமி கேசவானந்த பாரதி. இது, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் எடநீர் பகுதியில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இந்த மடத்தை பல ஆண்டுகள் நிர்வகித்து வந்தவர் கேசவானந்த பாரதி. இவர், பல பக்திப் பாடல்கள், நாடகங்கள் இயற்றியும், யக் ஷகானம் மூலமாகவும் இந்து தர்மம் தழைத்தோங்க பெரும் பங்காற்றியவர்.  

பக்தர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் பெரிதும் போற்றப்பட்ட இவர், ‘இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாட்டை மாற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பெறுவதற்கு பெரும்பங்காற்றியவர்.  

காசர்கோடு பகுதிக்கு கிழக்கே 10 கிமீ தொலைவில், மதுவாகினி நதிக்கரையில் உள்ளது எடநீர் மடம். அத்வைத வேதாந்தத்தின் ஸ்மார்த்த பாகவத பாரம்பரியத்தை போற்றும்விதமாக இந்து மதம், தர்ம சாஸ்திரம், பண்பாடு, கலாச்சாரம், கலை, இசை, சமூக சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு இந்த மடம் செயல்படுகிறது. தட்சிணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணா இங்கு ஆராதனை மூர்த்திகளாவர். ஆதிசங்கரரின் தலைமை சீடர்களில் ஒருவர் தோடகாச்சாரியார். அவரது சீடர்களால் இந்த மடம் நிர்வாகம் செய்யப்படுகிறது.

திருச்சூரில் தொடங்கப்பட்ட ஸ்ரீ சங்கராச்சார்யா தோடகாச்சாரிய மஹா சமஸ்தானம், திருச்சாம்பரம் பகுதியில் தனது கிளையை (பாடினார் மடம்)  கொண்டிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோடகாச்சாரியார், துலுநம்பி (ஷிவல்லி பிராமணர்) ஒருவருக்கு சந்நியாச ஆசிரம உபதேசம் செய்து வைத்தார்.  கேரளாவில் இருந்து துலுநாட்டுக்கு இடம்பெயர்ந்த அவரே ஷிவல்லி தேசிய விப்ரசாரவிசாரகராக நியமிக்கப்பட்டார்.  இவர் வெகுகாலம் சச்சிதானந்த பாரதி பீடாதிபதியாக இருந்து மக்களுக்கு உபதேசங்களை செய்து வந்தார்.

பொதுவாக இந்த மடத்தில் முறையே, கேசவானந்த பாரதி, சச்சிதானந்த பாரதி, பாலகிருஷ்ணானந்த பாரதி, ஈஸ்வரானந்த பாரதி என்ற பெயர்களே, சந்நியாசம் பெற்றுக் கொள்ளும்போது வழங்கப்படும். அதன்படி மூன்றாவது சுற்றில், பதினோராவது பீடாதிபதியான சுவாமி பாலகிருஷ்ணானந்த பாரதியில் இருந்துதான் தகவல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.  

சுவாமி பாலகிருஷ்ணானந்த பாரதியின் காலத்தில் மடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் விஷ்ணுமங்களா கோயிலும் பிறகு வனபிரஸ்தா கோயிலும் புதுப்பிக்கப்பட்டன. ஏழை எளிய மக்களுக்காக கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். தனது பூர்வாஸ்ரம சகோதரன் மகனான ராமகிருஷ்ணாவை 1910-ல்இந்த மடத்தின் பீடாதிபதியாக நியமித்தார். அவருக்கு ‘ஈஸ்வரானந்த பாரதி’  என்று பெயர் சூட்டப்பட்டது.  

சுவாமி ஈஸ்வரானந்த பாரதி காலத்தில் கல்வி, கலை, பண்பாடு கலாச்சார மையமாக எடநீர் மடம் விளங்கியது. 1941-ல் இலவச சத்துணவு வசதியுடன் கூடிய உயர் தொடக்கப் பள்ளி ஒன்றை நிறுவினார் ஸ்வரானந்தா. மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தபோது, கர்நாடக மாநிலத்தில் இருந்த காசர்கோடு பகுதி, கேரள மாநில எல்லைக்குள் வந்தது.  கேரள அரசின் உதவியுடன் 1959-ல்  மதீஷ்வரானந்த பாரதி உயர் தொடக்கப் பள்ளியை நிறுவினார். 1993-ல் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளி ஆனது.

யக்‌ஷகானம் என்று அறியப்படும் இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சியை பெரிதும் ஆதரித்தார் ஈஸ்வரானந்தா. அதன் காரணமாக, ‘ பாலகோபால கிருபாபோஷித நாடக சங்க’த்தை நிறுவி, இசை, பண்பாடு, கலாச்சாரத்தை போற்றி பரப்பும் வண்ணம், பலருக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்தார். சிறந்த ஆச்சாரியராக இருந்து பலருக்கும் ஆன்மிகம், தத்துவம் குறித்தும் உபதேசித்து வந்தார்.  
இவருக்கு அடுத்தபடியாக 1961-ல் எடநீர் மடத்தின் பீடாதிபதியாக சுவாமி கேசவானந்த பாரதி (ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சார்யா தோடகாச்சாரியா கேசவானந்த பாரதி ஸ்ரீபாதங்களவரு) நியமனம் செய்யப்பட்டார். 1940-ம் ஆண்டு டிச. 9-ம் தேதி, மஞ்சிதாயா ஸ்ரீதர பட் – பத்மாவதி தம்பதிக்கு பிறந்த இவர், சிறந்த பாடகர், அறிஞர், எழுத்தாளர் ஆவார். கலை, இசை, நாடகம் மூலம் பண்பாடு, கலாச்சாரம் போற்றி வந்தார்.

யக்‌ஷகானத்தை பெரிதும் ஆதரித்து வந்த இவரும் தர்ம சாஸ்திரத்தை இசை மூலம் பரப்பலாம் என்று உலகுக்கு உணர்த்தினார்.  ஆன்மிக, சமூக நாடகங்களை எழுதுவதில் வல்லவர். துலு மொழியில் பார்வதி பரிநயா, தைத்ய குரு சுக்கிராச்சார்யா, சத்யமேவ ஜெயதே,  சலந்தக கௌரவா, தேவரு தொட்டவனு, அவிதேய ராஜசேகரா, சென்னமன்ன பீகாரு, நிகிலு என்னன் மரப்பாட, பரிமானே போன்ற நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.  

சிறந்த கர்னாடக சங்கீத வித்வானான சுவாமி கேசவானந்த பாரதி, தான் எழுதி இசையமைத்த பாடல்களை தொகுத்து ‘ஆனந்தாம்ருதா’ என்ற நூலை  வெளியிட்டுள்ளார். இவர் இந்துஸ்தானி இசையிலும் நன்கு புலமை பெற்றவர்.  

கேசவானந்த பாரதி வழக்கு

கேரள அரசின் புதிய நில சீர்திருத்தச் சட்டம் காரணமாக,  எடநீர் மடத்துக்கு சொந்தமான விளைநிலங்கள் கேரள அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனால் ஏற்படும் பாதிப்பால் மடத்தின் உரிமைகள் பறிபோகும்  என்பதை உணர்ந்து, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித சொத்துரிமைக்கு எதிராகச் செயல்பட்ட கேரள அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கேசவானந்த பாரதி வழக்கு தொடர்ந்தார்.  

வழக்கு விவாதங்களில், நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு விரிவான வாதங்களும் அதன் நீட்சியாக ஜனநாயகம் எவ்விதம் பாழ்படுத்தப்படுகிறது என்பதும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 63 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சுவாமி கேசவானந்த பாரதிக்கு சாதகமாக அமைந்தது.  

இந்த வழக்கில், ‘அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றமோ சட்டமன்றங்களோ தலையிட உரிமை இல்லை’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு (24 ஏப்ரல் 1973) வழங்கப்பட்டது.  
சுவாமி கேசவானந்த பாரதி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்க துணை நின்றதால், இந்த வழக்கு ‘கேசவானந்த பாரதி வழக்கு’  என்று வரலாற்றில் இடம்பிடித்தது. இதன் மூலம் நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ தமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ள உரிமையை மீறிச் செயல்படும்போது, அவற்றின் செயல் குறித்து முறையீடு செய்ய நீதிமன்றங்களை அணுகலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சமயப் பணிகள் மட்டுமல்லாது பல கல்விப் பணிகளையும் செய்துவந்தார் கேசவானந்தா. அத்வைத சித்தாந்த சாஸ்திரங்களை போதித்தவர், யக்‌ஷகானம் நிகழ்ச்சிகளில் பாடி இறைவனின் அருமை பெருமைகளையும் எடுத்துரைத்து வந்தார்.  கன்னட மொழிவழி கல்விக் கூடம், ஆங்கிலவழி கல்விக் கூடம், மேல்நிலைப் பள்ளி, சம்ஸ்கிருத வேத பாடசாலை உள்ளிட்டவற்றையும் நிறுவினார்.  

பல இடங்களுக்கு யாத்திரை சென்று கலாச்சாரம், பண்பாடு குறித்த சொற்பொழிவுகளை ஆற்றிவந்தார் கேசவானந்தா. பல மடங்களைச் சார்த்த மடாதிகளை சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை செய்து, இந்து தர்ம, சாஸ்திரங்களை இளைய தலைமுறையினரும் உணரும் வண்ணம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அனைவருக்கும் சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.  

காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில் போன்ற ஆன்மிக தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார் கேசவானந்தா. அலகாபாத் கும்பமேளாவில் பங்கேற்று, தான் சென்ற இடங்களில் எல்லாம் தனி மனித ஒழுக்கம், உயரிய சிந்தனை, கல்வி உள்ளிட்டவை குறித்த அறிவுறுத்தல்களைச் சொல்லி வந்தார்.  

கோயில் நிர்வாகம்

எடநீர் மடம் சார்பாக பல்வேறு கோயில்களை நிர்வகித்து வந்தார் கேசவானந்தா. மடத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள விஷ்ணுமங்களா கோயில், தெற்கு பகுதியில் அமைந்துள்ள வன சாஸ்தரா கோயில், அடூர் கிராமத்தில் உள்ள வனதுர்கா கோயில், ஆர்யபுரா கிராமத்தில் உள்ள மகிஷமர்த்தினி கோயில், திருச்சாம்பரம் (கேரளா) கிருஷ்ணர் கோயில், கோரமங்களா (பெங்களூரு) கிருஷ்ணர் கோயில் ஆகிய கோயில்கள் எடநீர் மடத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.  

பூதஸ்தானங்களும் எடநீர் மடத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. எடநீர் மடத்தில் உள்ள குந்திபாலா சாமுண்டி பூதஸ்தானம், மடத்தைச் சுற்றியுள்ள கூர்க்கபாடி, சம்பரம்பாடி, கண்டத்தேல வீடு, பைரமூல பூதஸ்தானங்கள் அதில் முக்கியமானவை.  

எடநீர் மடத்தின் வடக்குப் பகுதியில், நீரமுனி மகரிஷி அமர்ந்து தவம் செய்த இடத்தில் விஷ்ணுமங்களா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கும்ப சங்கராந்தி தினத்தில் ஐந்து நாள் திருவிழா தொடங்கும். அன்றைய தினம் அலங்காரம் செய்யப்பட்ட ஹரி (திருமால்), ஹரன் (சிவபெருமான்) மூர்த்திகளை, கோயில் அர்ச்சகர்கள் தலையில்  சுமந்து நடனமாடிய வண்ணம்  உலா வருவர். ஐந்தாம் தினம் மதுவாகினி நதிக்கரையில் தெப்ப உற்சவம் நடைபெறும்.  மதுவாகினி நதிக்கரையில் மலையின் மீது அமைந்துள்ள வன சாஸ்தரா கோயில் உற்சவத்துக்கும், சனிக்கிழமைதோறும் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிக்கும் சுவாமி கேசவானந்த பாரதி ஏற்பாடுகள் செய்துள்ளார்.  

எடநீர் மடத்தில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள அடூர் பகுதியில் பாயஸ்வனி நதிக்கரையில் வனதுர்கா கோயில் அமைந்துள்ளது. ஒரு சமயம், இக்கோயிலில் இளம் எருமை ஒன்று இருந்தது. அதை இத்தலத்தில் வீற்றிருக்கும் மகிஷமர்த்தினி காத்தருளியதால், இன்றும் இத்தெய்வத்துக்கு எருமை நெய் படைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திர தினத்தில் இங்கு ஆண்டுவிழா தொடங்கி சிறப்பாக நடைபெறும்.  

எடநீர் மடத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள ஆர்யபுரா கிராமத்தில் அமைந்துள்ள மகிஷமர்த்தினி கோயிலிலும் கார்த்திகை மாதம் பவுர்ணமியில் தொடங்கி திருவிழாக்கள் நடைபெறும் . கன்னூர் அருகே திருச்சாம்பரம் பகுதியில் எடநீர் மடத்தின் கிளை அமைந்துள்ளது. அவ்வப்போது எடநீர் மடத்தின் மடாதிபதிகள் இங்கு வந்து தங்குவது உண்டு. இவ்விடத்தில்  எடநீர் மடத்தின் முந்தைய மடாதிபதிகளின் சமாதிகள் அமைந்துள்ளன.

இங்கு அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் மார்ச் மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் ‘திடம்பு நடனம்’ சிறப்பாக நடைபெறும்.  எடநீர் மடத்தின் மடாதிபதிகள் கலந்து கொள்ளும் இவ்விழாவில், கிருஷ்ணர், பலராமர் மூர்த்திகளை, அர்ச்சகர்கள் தலையில் சுமந்தபடி நடனமாடிச் செல்வர்.   மடத்தின் பெங்களூரு கிளையில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் ஒவ்வொரு ஜென்மாஷ்டமியின் போதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். மே மாதத்தில் இங்கு ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு நடன நிகழ்ச்சிகள், பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். இந்தக் கோயில்கள், பூதஸ்தானங்கள் அனைத்திலும்  நட்சத்திர, மாதாந்திர, வருடாந்திர திருவிழாக்கள் நடைபெற சுவாமி கேசவானந்த பாரதி ஏற்பாடுகள் செய்துள்ளார்.  

கும்ளே அருகே உள்ள அனந்தபுரா அனந்தபத்மநாப சுவாமி கோயிலும் ஒருகாலத்தில் எடநீர் மடத்தால் நிர்வகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கும் எடநீர் மடத்தின்  முந்தைய மடாதிபதிகளின் சமாதிகள் உள்ளன.  

புதிய மடாதிபதி

சுவாமி கேசவானந்த பாரதி  முதுமை காரணமாக 2020-ம் ஆண்டு செப்டம்பர் 6-ல் ஆச்சாரியன் திருவடி அடைந்தார். அதன்பிறகு கடந்த அக்டோபர் 26-ம் தேதி காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், எடநீர் மடத்தின் அடுத்த மடாதிபதியாக ஸ்ரீ ஜயராம் மஞ்சத்தாயாவுக்கு ஆஸ்ரம ஸ்வீகரணம் செய்து வைத்தார்.  எடநீர் மடத்தின் சம்பிரதாயப்படி இப்போதுள்ள புதிய மடாதிபதியின் திருநாமம்  ‘சச்சிதானந்த பாரதி’’ என்பதாகும்.

x