எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
மைனஸ் 50 டிகிரி ஃபாரன்ஹீட் உறை நிலையிலும் ரஷ்ய வீதிகளில் அனல் பறக்கிறது. அதிபர் புதினுக்கு எதிரான போராட்டத்தில் தேசமே அதிர்கிறது. வாழ்நாள் அதிபராக அவதாரமெடுத்த புதின், நவீன ஜார் மன்னர் என்ற கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வகையில் புதினுக்கு எதிரான தற்போதைய போராட்டம், ‘ரஷ்யாவின் புதிய புரட்சி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்தப் புரட்சியின் மையமாக இருப்பவர், 44 வயதாகும் அலக்ஸே நவால்னி என்ற சாமானியர். சிறைவாசம், வழக்குகள், கொலைவெறித் தாக்குதல்கள் என எதிர்ப்புகள் எதுவானாலும் அவற்றை முறியடித்து போராட்டக் களத்தில் முன்னேறிவருகிறார் நவால்னி.
அஞ்சான் அலக்ஸே!
2020 ஆகஸ்டில் செர்பியாவிலிருந்து மாஸ்கோவுக்குக் கிளம்பிய விமானத்தில் பயணித்த அலக்ஸே நவால்னி, அபயக் குரலுடன் திடீரென சரிந்து மயக்கமானார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு அருகமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தாழ் நீரிழிவு காரணமாகவே நவால்னி மயக்கத்தில் ஆழ்ந்ததாக அங்கிருந்த மருத்துவர்கள் சாதித்தனர். ஆனால், அவர் ரசாயனத் தாக்குதலுக்கு ஆளாகி கோமாவில் வீழ்ந்தார் எனும் ரகசியத் தகவல் சமூக ஊடகங்களில் பரவி, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சேபக் குரல்கள் வரை பதற்றம் தொற்றியது. சர்வதேச சேவை அமைப்பு ஒன்றின் தலையீட்டால் ஜெர்மனி மருத்துவனைக்கு நவால்னி மாற்றப்பட்டார். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் கோமாவிலிருந்து நவால்னி மீண்டதுடன், அவரது ஆடையிலிருந்த ‘நோவிசோக்’ என்ற கொடும் விஷத்தின் எச்சமும் அடையாளம் காணப்பட்டது.