வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கடந்த ஒரு தசாப்தமாக, பகுதியளவிலான ஜனநாயகக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த மியான்மர் மக்கள், பிப்ரவரி 1-ம் தேதி காலை களேபரத்துடன் கண் விழித்தனர். ஸ்டேட் கவுன்சிலர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை ராணுவம் கைதுசெய்த தகவலும், ஆட்சி ராணுவத்தின் வசம் சென்றுவிட்ட தகவலும் வெளியானதைத் தொடர்ந்து எங்கும் பதற்றம் பற்றிக்கொண்டது.
அடுத்து என்ன வேண்டுமானாலும் நிகழலாம் எனும் அச்சத்தில், பொதுமக்கள் முன்னேற்பாடாக வங்கிகளிலும், ஏடிஎம்-களிலும் பணம் எடுக்க முண்டியடித்தனர். அத்தியாவசியப் பொருட்களை அவசர அவசரமாக வாங்கிக்கொண்டனர். அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தலைநகர் நேபியேட்டோவில் ராணுவ ஆதரவாளர்கள் வாகனங்களில் வலம் வந்தனர். ராணுவ ஆதரவு பாடல்கள் எங்கும் எதிரொலித்தன. ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லாய்ங்குக்கு ஆதரவான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வாகனங்களில் பவுத்த துறவிகள் ஏராளமானோர் இருந்தனர். மக்கள் அந்தக் காட்சிகளை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதிகாரம் மிக்க ராணுவம்