கரு.முத்து
muthu.k@kamadenu.in
‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்; தான் மறைந்துவிட்டாலும் தனது கடமையைத் தனது மகள் நிச்சயம் நிறைவேற்றுவாள் என்று...’ - ஏதோ திரைப்பட வசனம் போல இருக்கிறதா? வாழ்க்கையிலிருந்துதானே வசனங்கள் எடுக்கப்படுகின்றன. ஆம்! தனது தங்கையின் திருமணத்தைத் தந்தையின் ஸ்தானத்திலிருந்து, தந்தையின் உருவச் சிலை முன்னிலையில் நடத்திவைத்ததன் மூலம் உன்னத மகளுக்கு உதாரணமாகியிருக்கிறார் புவனேஸ்வரி கார்த்திக்.
நனவான கனவு
பட்டுக்கோட்டை தங்கேவல் நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் செல்வம். அதிகம் படிக்காதவரான செல்வம், ஐஸ் ஃபேக்டரி, இறால் வளர்ப்பு என்று சொந்தமாகப் பல தொழில்களைச் செய்து உழைப்பால் உயர்ந்தவர். மனைவி கலாவதியின் அன்பால் விளைந்த இல்லறத்தின் பயனாகப் பிறந்த புவனேஸ்வரி, திவ்யா, லட்சுமி பிரபா ஆகிய மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்தார் செல்வம். புவனேஸ்வரி பல் மருத்துவராகவும், திவ்யா பொறியாளராகவும் படித்து ஆளானார்கள். இருவருக்கும் ஊரே ஆச்சரியப்படும்படியாக வெகு விமரிசையாகத் திருமணம் செய்துவைத்த செல்வம், துரதிருஷ்டவசமாகக் கடந்த 2012-ல் காலமாகிவிட்டார்.