மீனவர்களின் படுகொலைக்கு உரிய நீதி தேவை!


தமிழக மீனவர்கள் நால்வர், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கிறது. இதுதொடர்பாக, மாநிலங்களவையில் திமுக, அதிமுக என தமிழகத்தின் இரு துருவக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒரே குரலில் கேள்வி எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜனவரி 18-ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் சென்ற மீனவர்கள், நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையின் கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும், டெல்லியில் உள்ள இலங்கைப் பொறுப்புத் தூதரிடமும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது. எனினும், நீண்டகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசியம் எனும் குரல்கள் மீண்டும் ஓங்கி ஒலிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி-க்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், அது மட்டும் போதாது. கேரளத்தின் கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இருவர், இத்தாலி கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டனர். இன்னமும் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்றாலும் சர்வதேச நீதிமன்றம் வரை வழக்கைக் கொண்டுசெல்ல முடிந்தது. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டாலும், தாக்கப்பட்டாலும், கைதுசெய்யப்பட்டாலும் நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்நிலையில், கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒரே குரலில் திமுகவும், அதிமுகவும் பேசுவது ஆறுதல் தருகிறது. உரிய தீர்வு கிடைக்கும்வரை இந்த ஒற்றுமை தொடர வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தமிழக அரசும் முன்வர வேண்டும். மீனவர்களின் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

x