இனி எல்லாமே ஏ.ஐ - 8 : இணைந்த கைகள்: சட்டமும், ஏ.ஐ-யும்!


நீதித் துறையில் ஏ.ஐ நுட்பத்தின் பயன்பாட்டை, கடந்த வாரம் பருந்துப் பார்வையாகப் பார்த்தோம். இந்த வாரம், நீதித் துறைக்கும் ஏ.ஐ நுட்பத்துக்கும் இடையில் அமைந்திருக்கும் இயல்பான பொதுத் தன்மையைப் பார்ப்போம். அதற்கு முன்னதாக, வழக்கமாக எழும் சந்தேகத்தையும் நிவர்த்தி செய்துவிடலாம். ஏ.ஐ பங்களிக்கும் எந்தத் துறை சார்ந்தும் முதலில் எழும் கேள்வி, அந்தத் துறையில் மனிதர்களின் பங்களிப்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ, மனிதர்களின் இடங்களை இயந்திரங்கள் ஆக்கிரமித்துக்கொள்ளுமோ என்பதுதான். நீதித் துறையில் அப்படி எந்த ஆபத்தும் இல்லை. ஒரு வழக்கறிஞர் பரிசீலிக்க வேண்டிய ஆவணங்களை அதற்கென உருவாக்கப்பட்ட ஏ.ஐ மென்பொருட் மின்னல் வேகத்தில் அலசி ஆராய்ந்து, தேவையான குறிப்புகளை அளித்துவிடும் என்றாலும், வழக்கறிஞர் வேலையை அது இல்லாமல் செய்துவிடாது.

மனிதர்களின் பங்களிப்பு தொடரும்

ஏ.ஐ என்றதும், மனிதர்களை மிஞ்சக்கூடிய இயந்திர ஆற்றல் என உருவகப்படுத்திக்கொள்ளும் தன்மை பரவலாக இருந்தாலும், அறிவார்ந்த செயல்பாடு என வரும்போது, மனிதர்கள் சர்வசாதாரணமாகச் செய்யக்கூடிய விஷயங்களைச் செய்து முடிக்கும் திறனைக்கூட அதிநவீன ஏ.ஐ பெறவில்லை என்பதுதான் நிதர்சனம். சிந்திக்கும் இயந்திர அறிவு எல்லாம் இன்னமும் அறிவியலுக்கு எட்டாக்கனிதான்.

ஏ.ஐ நுட்பம் சார்ந்த இயந்திரங்கள், தரவுகளைக் கையாள்வதில் மனிதர்களை மிஞ்சிவிடுகின்றன என்பதோடு, சோர்வின் சுவடே இல்லாமல் செயல்படக்கூடிய திறன் பெற்றுள்ளன என்பதுதான் மிக முக்கியமான அம்சம். எடுத்துக்காட்டாக, ஒரு வழக்குடன் தொடர்புடைய பழைய வழக்குகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றால், அனுபவம் வாய்ந்த வழங்கறிஞரால்கூட, பத்து பதினைந்து வழக்குகளைத்தான் நினைவில் கொண்டுவர முடியும். ஆனால், ஏ.ஐ அப்படியல்ல... நூறு அல்ல ஆயிரக்கணக்கான வழக்கு விவரங்களை துரித கதியில் பரிசீலித்துவிடும்!

விரைவாகச் செயலாற்றும்

ஏ.ஐ பயன்பாட்டுக்கு ஏற்றதாகச் சட்டத் துறை இருக்கிறது என்பதும் இதற்கு முக்கியக் காரணம். செயற்கை நுண்ணறிவு மனித மூளையுடன் ஒப்பிடப்பட்டாலும், அடிப்படையில் அது, கணிதவியல், தர்க்கவியல் உள்ளிட்ட கோட்பாடுகளைச் சார்ந்தே இயங்குகிறது. ‘கம்ப்யூட்டர் விஷன்’ எனப்படும் இயந்திரங்களின் பார்க்கும் திறனையே எடுத்துக்கொள்வோம். மனிதர்கள் ஒரு பூவைப் பார்த்ததும் அது ரோஜாவா, மல்லிகையா அல்லது பெயர் தெரியாத பூவா என எளிதாகக் கண்டறிந்துவிடுவார்கள். ஆனால், கணினியோ, பூவை ‘பிக்ஸல்’ (pixels) கூட்டமாகப் பார்த்து, அதைக் கணக்குப் போட்டு, ‘ரோஜா போன்ற பூ’ என்கிறது. இதைச் செய்ய முதலில் அதற்கு ரோஜாவின் இயல்புகளை விளக்கி, லட்சக்கணக்கில் ரோஜா மலர் மாதிரிகளைக் காண்பித்தாக வேண்டும். ஆனால், ரோஜாவின் தன்மையைவிட, சட்ட நுணுக்கங்களைக் கணினிக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்கலாம். ஏனெனில், சட்டம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளைக் கொண்டது. கணினிக்குப் புரியும் மொழியில் அதை மாற்றிக் கொடுக்கலாம்.

ஆம், இயந்திரக் கற்றலும், சட்டமும் ஒரே மாதிரியாகச் செயல்படுகின்றன. இவை இரண்டுமே, கடந்த கால உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய சூழலுக்கு ஏற்ற விதிகளைப் பொருத்திப்பார்க்கின்றன. அதுமட்டுமல்ல, சட்டம் என்பது, கணினிக்குப் புரியக்கூடிய தர்க்கவியலுடன் ஒத்துப்போகிற அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான தகவல்களுக்குப் பொருந்தக்கூடிய விதிகளை, தொடர்புடைய பழைய வழக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், புதிய வழக்குக்கான முடிவை எளிதாகத் தீர்மானிக்கலாம். சட்டப் புத்தகத்தைக் கொண்டு நீதிபதிகள் இதைத்தான் செய்கின்றனர்.

எப்படி சாத்தியமாகிறது?

தர்க்கம் சார்ந்த இந்த அணுகுமுறை இயந்திரக் கற்றலுக்கு மிகவும் ஏற்றது என்பதால், வழக்காடுதல் சார்ந்த ஏ.ஐ மென்பொருட்களை உருவாக்க முடிகிறது. அதற்கான தேவையும் உள்ளது. புதிய வழக்கு, தொடர்புடைய பழைய வழக்குடன் ஒப்பிட்டுப்பார்த்து, அதை வழிகாட்டியாகக் கொண்டு, தற்போதுள்ள ஆவணங்களையும், சாட்சியங்களையும் அணுகலாம். அதன் அடிப்படையில் வழக்கை வாதாடலாம். இந்தப் பணியை வழக்கறிஞர்தான் செய்ய முடியும். ஆனால், அவரது கோரிக்கை அடிப்படையில், மொத்த நீதிமன்ற வரலாற்றையும் ஆய்வு செய்து பொருத்தமான வழக்குகளை மென்பொருளால் உடனடியாகத் தேடித்தர முடியும்.

அதேபோல, கட்டுக்கட்டான ஆவணங்களில் குறிப்பிட்ட வார்த்தைகள் எங்கெல்லாம் வருகின்றன என மென்பொருட் கண்டறிந்து சொல்லிவிடும். வழக்கறிஞரோ அவரது உதவியாளர்கள் குழுவோ, மணிக்கணக்கில் பார்த்தாலும், இந்தப் பணியில் பல இடங்களில் கோட்டை விடலாம். ஆவணங்களை இயந்திரங்கள் படிக்கக்கூடிய வடிவில் உருவாக்கிக் கொடுத்துவிட்டால் போதும். மென்பொருட்கள் களைப்பே இல்லாமல் செயல்பட்டு துல்லியமான பதில்களை அளிக்கும். பல சூழல்களில் மனிதத் தவறால் ஏற்படும் பிழைகளைத் தவிர்த்துவிடலாம். இதுபோன்ற இடங்களில் எல்லாம்தான் இப்போது ஏ.ஐ நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஒற்றுமைத் தன்மை

இத்தகைய சாத்தியத்தையும், தேவையையும் சட்டத் துறை தொடக்கத்திலேயே உணர்ந்திருந்ததால்தான் செயற்கை நுண்ணறிவின் ஆரம்ப காலத்தில் இருந்தே, சட்டத் துறையில் அதன் பயன்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதாவது சட்டமும், செயற்கை நுண்ணறிவும் ஆரம்பத்திலிருந்தே நெருக்கமாக அமைந்துள்ளன. சட்ட தகவலியல் (Legal informatics) எனும் தனித் துறையும், அதன் அங்கமாக கணிப்பொறியியல் சட்டம் (Computational law) போன்ற துறையும் உருவானதை இதற்கு உதாரணமாகக் கருதலாம்.

இதைவிட ஆச்சரியம் என்னவெனில், செயற்கை நுண்ணறிவு 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருக்கொள்வதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே லீப்னிஸ் (Leibniz) எனும் கணித மேதை, அறிவியல் அறிஞர் சட்டத்தை இயந்திரமயமாக்குவது பற்றி சிந்தித்து அதற்கான கோட்பாடுகளை வகுக்க முயன்றார் என்பதுதான். ஒருவிதத்தில் பார்த்தால், சட்டத் துறையில் ஏ.ஐ பயன்பாட்டின் முன்னோடியாகவும் அவரே விளங்குகிறார்.

லீப்னிஸ் இயந்திரம்!

கணினி வரலாற்றில் இரண்டு இயந்திரங்கள் முக்கியமானவை. முதல் இயந்திரம் ‘கணினியின் தந்தை’ என வர்ணிக்கப்படும் சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய, ‘அனல்டிகல் இன்ஜின்’ (Analytical Engine). அவர் உருவாக்க உத்தேசித்திருந்த இந்த இயந்திரம் நடைமுறைக்கு வந்துவிடவில்லை என்றாலும், நவீன கணினிக்கான கருத்தாக்க முன்னோடியாக இது கருதப்படுகிறது. இதேபோல, செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன கணிப்பொறியின் முன்னோடியாகக் கருதப்படும் ஆலன் டியூரிங் (Alan Turing) உருவாக்க உத்தேசித்திருந்த, ‘யூனிவர்சல் மிஷின்’ என வர்ணிக்கப்படும் டியூரிங் இயந்திரம் நவீன டிஜிட்டல் கணினிக்கான அனைத்து ஆதார அம்சங்களையும் கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் முன்பாக, 17-ம் நூற்றாண்டிலேயே ஜெர்மனி கணித மேதையான லீப்னிஸ், ‘ஸ்டெப் ரெக்கனர்' எனும் கணக்கிடும் இயந்திரத்தை உருவாக்கியிருந்தார். கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளைப் போடக்கூடிய திறன் கொண்ட இந்த இயந்திரத்தை அவர் தர்க்கவியலுடன் இணைந்து சிந்திக்கும் திறன் கொண்ட இயந்திரமாக உருவாக்கலாம் என கனவு கண்டார்!

(தொடரும்)

x