வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in
நினைத்தாலே முக்தி தரும் இடமாக பக்தர்களால் போற்றப்படுவது திருவண்ணாமலை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலங்கள் பலவும் இந்த ஊரில் உள்ளன. தைப்பூசம் வைபவத்தையொட்டி நாளுக்கொரு திருப்புகழை ‘ராகமாலிகா' தொலைக்காட்சியில் காணொலியாகப் பதிவேற்றி வருகின்றனர். கட்டிடக் கலை நிபுணரும் வரலாற்று அறிஞருமான மதுசூதனன் கலைச்செல்வன், திருப்புகழின் சிறப்பை விளக்கும் செறிவான சொற்பொழிவை வழங்க, இதமாகத் தொடர்கின்றன திருப்புகழின் தமிழ் மணக்கும் பாடல்கள்!
திருப்புகழின் பெரிய பலமே அனேகமும் ஏகமாக ஒளிர்வதுதான். முருகனைப் பாடுவதே அருணகிரியாரின் இறுதியான லட்சியமாக இருந்தாலும், “அம்பிகை, திரிசூலி, உமையவள் அருளிய குழந்தையே...” என்றும், “விநாயகனின் சகோதரனே...” என்றும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. ராமனின் புகழைப் பாடி, “இந்த ராமனுக்கு மருமகனே...” என்பார். இப்படி கடவுளர்களிடத்திலும் உற்ற உறவுகளைப் போற்றியவர் அருணகிரிநாதர். ‘அமுதமூறு...’ எனத் தொடங்கும் இந்தத் திருப்புகழை சைந்தவி பிரகாஷ், சுசித்ரா பாலசுப்பிரமணியன், வினயா கார்த்திக், வித்யா கல்யாணராமன் ஆகியோரின் குரலில் கேட்கும்போதும் அனேகம் ஏகமாக ஒலிக்கும் ஆனந்தத்தை உணரலாம்!
திருப்புகழின் தித்திப்பை உணர: https://www.youtube.com/watch?v=srYDNGwqoKQ