ஹாட் லீக்ஸ்: புகுந்து விளையாடும் பூர்வா கர்க்!


‘உதவி’க்கு உலைவைத்த தளவாய்?

குமரி மாவட்டம், தோவாளை ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவராகவும் இருக்கும் இவர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளரும்கூட. அண்மையில் கிருஷ்ணகுமார் சம்பந்தப்பட்ட வில்லங்க வீடியோ ஒன்று வெளியாகி முதல்வர் வரைக்கும் புகார் போனது. ஆனாலும் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை பாயாமல் பார்த்துக் கொண்டார் தளவாய். இந்நிலையில், தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி, கிருஷ்ணகுமாருக்கு எதிராக தொடர்ந்து தளவாயிடம் புகார் சொல்லி வந்தாராம். இதற்காக கிருஷ்ணகுமாரைக் கூப்பிட்டு தளவாய் சுந்தரம் கண்டித்த நிலையில், திடீரென ஒன்றியச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கிருஷ்ணகுமார். தளவாய் தன்னை அழைத்து தாஜா செய்வார் என்று எதிர்பார்த்தே ராஜினாமா கடிதம் கொடுத்தாராம். ஆனால், ராஜினாமாவை ஏற்க வைத்ததுடன் அந்த ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பொறுப்பாளர்களையும் நியமித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் தளவாய். கூடிய சீக்கிரமே தோவாளையிலும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் பளிச்சிடலாம்.

பூனைக்கு மணி கட்டிய சுந்தரேசன்!

கட்சிக்குள் தனது மகன் கம்பனை முன்னிலைப்படுத்துவதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக நெடுநாள் புகைச்சல் உண்டு. இருந்தாலும் இத்தனை நாளும் பூனைக்கு யாரும் மணி கட்டவில்லை. இந்த நிலையில், வேலுவின் குடும்ப அரசியல் குறித்து மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய செல்போன் பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. அதில், வேலு எந்தெந்த தொழில்களில் எல்லாம் எவ்வளவு கோடிகளை முதலீடு செய்து சொத்துச் சேர்த்திருக்கிறார் என்பதை பட்டியல் போடும் சுந்தரேசன், “கட்சிக்காக ரத்தம் சிந்தி உழைத்தவர்கள் எல்லாம் செத்துக் கிடக்கிறார்கள். ஆனால், அப்பனும் பிள்ளையும் அனைத்தையும் அனுபவிக்க துடிக்கிறார்கள். கட்சிக்கு உழைக்கும் யார் வேண்டுமானாலும் மேலே வரலாம். அது கலைஞரா இருந்தாலும் சரி, கலைஞர் பிள்ளையாக இருந்தாலும் சரி” என்று காட்டமான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். சுந்தரேசனின் இந்தப் பேச்சு மாவட்ட திமுகவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில், கடந்த 4-ம் தேதி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அவரசர ஆலோசனைக் கூட்டம் எ.வ.வேலு தலைமையில் கூடியது. இதில் பேசிய பலரும், “கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசிய சுந்தரேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆவேசப்பட்டார்கள். திமுக கிச்சன் கேபினெட்டின் அனுக்கிரஹம் பெற்றவர் எ.வ.வேலு என்பதால் சுந்தரேசன் எந்த நிமிடமும் கட்சி யிலிருந்து கட்டம் கட்டப்படலாம் என்கிறார்கள்.

x