ரோகிணி
readers@kamadenu.in
‘‘எனது நிலையைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தால் எனக்கு யாருமே ஆர்டர் தர மாட்டார்கள்; எனது தொழிலாளர்கள் என்னுடன் இருக்க மாட்டார்கள்; என் தொழிலும் என்னுடன் இருக்காது. எனவேதான் தொழிலதிபர் என்ற கோதாவை விட்டுக்கொடுக்காமல் ‘ஆகா, பிரமாதம்!’ என்று வெளியே சிரித்துக்கொண்டு, உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்கிறோம்’’ ராகுல் காந்தியிடம் இப்படிப் பேசியதன் மூலம், ஒரேநாளில் தேச பிரபலமாகியிருக்கிறார் கே.இ.ரகுநாதன். தமிழக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கோவையில் குறுந்தொழில் முனைவோரைச் சந்தித்து கலந்துரையாடினார் ராகுல் காந்தி. இந்தியத் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எனும் முறையில் அக்கூட்டத்தில் பேசிய ரகுநாதனின் வார்த்தைகள்தான் அந்நிகழ்ச்சியின் ஹைலைட். ரகுநாதனிடம் இதுகுறித்துப் பேசினேன்.
உங்கள் கோரிக்கையை ராகுல் காந்தியிடம் முன்வைத்தது ஏன்? பிரதமர் மோடியிடமோ, மத்திய அமைச்சர்களிடமோ அவற்றை வலியுறுத்தியிருக்கலாமே?
முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் வருகை தரும்போது அவரிடம் இதை வெளிப்படுத்த வேண்டியது என் கடமை. பிரதமரோ, நிதி அமைச்சரோ வந்திருந்தாலும் அவர்களிடமும் இதைத்தான் சொல்லியிருப்பேன்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கங்கே இப்படி சிறு, குறு, நடுத்தரத் தொழிலதிபர்களைச் சந்தித்ததாகச் செய்திகள் வந்தனவே?