அரசியலுக்கு வருவேன்… தமிழ்நாட்டை சிங்கப்பூராக மாற்றுவேன்!- இது ‘சிங்கப்பூர்’ ரஜினியின் சூப்பர் சூளுரை


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

“யாரு பாஸ் நீங்க?” என ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உடையில் வித்தியாசம் காட்டுபவர் சிங்கப்பூர் ரஜினி. நடை, உடை, பாவனை அத்தனையிலும் நடிகர் ரஜினியைப் பிரதிபலிக்கும் இவர், முருகேசன் எனும் தனது இயற்பெயரையும் ‘சிங்கப்பூர் ரஜினி’ என மாற்றிக்கொண்டு கலையுலகில் இயங்கிவருகிறார். தனது பெயரிலேயே ‘சிங்கப்பூர் ரஜினி’ எனும் படத்தைத் தானே தயாரித்து, தானே நடித்து, சிங்கப்பூரில் வெளியிட்டிருக்கும் இவர், தற்போது தமிழகத்திலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினேன்.

“எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம். சென்னையில் பாலிடெக்னிக் படிச்சுட்டு 20 வருசத்துக்கு முன்னாடியே சிங்கப்பூருக்குப் போயிட்டேன். ஆரம்பத்தில் மெக்கானிக் வேலைதான் பார்த்தேன். அப்புறம் சிங்கப்பூர் நிரந்தரவாசின்னு குடியுரிமை வாங்கிட்டேன். இப்போ சிங்கப்பூரில் பிரபலமான ஒரு சூதாட்ட கிளப்பில் வேலை செய்றேன்” என்று ரஜினி ஸ்டைலில் தலைமுடியைக் கோதிக்கொண்டே சுருக்கமாக சுய அறிமுகம் தந்தவர், தனது கலையுலக வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது மேலும் உற்சாகமாகிறார்.

“சின்ன வயசுல இருந்தே, என்னைப் பார்க்கும் எல்லாரும் எனக்கு ‘கேமரா ஃபேஸ்’னு சொல்லுவாங்க. நானும் எப்பவுமே வித்தியாசமாத்தான் டிரஸ் பண்ணுவேன். அதனாலேயே என்னைப் பார்க்கும் எல்லாருமே   ‘நாடக நடிகரா’ன்னு கேட்பாங்க. இதையெல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கும் இயக்குநர் ஆகணும்னு ஆசை வந்துடுச்சு. ஆனா, குடும்பச் சூழல் ஒத்துழைக்கல. அதனால சிங்கப்பூருக்குப் போனேன். அங்கே, என்னோட உடல் அமைப்பு, காஸ்ட்யூம் எல்லாத்தையும் பார்த்துட்டு சிலர் என்னை ‘சிங்கப்பூர் ரஜினி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. சூதாட்ட கிளப்பில் இருந்த எனக்கு அந்த வார்த்தைகள் மறுபடி சினிமா ஆசையைத் தூண்டிவிட்டுச்சு. சிங்கப்பூரில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் என்னைச் சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுப் பாடச் சொல்லுவாங்க. எப்பவும் ரஜினி பாட்டுதான் பாடுவேன். ‘சிங்கப்பூர் ரஜினிங்கிற பேரு உங்களுக்கு ரொம்பப் பொருத்தம்’னு கொண்டாடுவாங்க. அப்போதான் நானே படம் எடுத்து, நடிக்கிறதுன்னு முடிவு செஞ்சேன்.

x