பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ- பாமரத் தமிழர்களின் ரசனைக்குக் கிடைத்த விருது!


கே.சோபியா
readers@kamadenu.in

பொதுவாக பத்ம விருது பெற்றவர்களைப் பற்றி பத்திரிகைகள் சிறுகுறிப்பு வரைந்து தான் வெகுஜனத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டியதிருக்கும். ஆனால், பட்டிமன்றம் மூலம் உலகறிந்த தமிழறிஞரான சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.

பட்டிமன்ற பாப்பையா என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது என்றாலும், பட்டிமன்றம் மட்டுமே அவரது அடையாளம் அல்ல. பேராசிரியர், நூலாசிரியர் என்று பல்வேறு பரிமாணங்களும் அவருக்குண்டு. கடந்த 2019-ம் ஆண்டு கூட அவர் எழுதிய புறநானூறு விளக்கவுரை (1,000 பக்கம்) நூல் வெளியானது.

5,000 பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்த பெருமைக்குரிய பாப்பையாவின் இளமைக்காலம், கொடுமையானது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் - பாக்கியம் தம்பதிக்கு 9-வது பிள்ளையாகப் பிறந்தவர் அவர். ஏற்கெனவே வறுமையான குடும்பம், வதவதவென பிள்ளைகள், அப்பாவுக்குக் குடிப்பழக்கம் வேறு. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல். பிழைப்புக்காக அங்கிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து, தாயும், தந்தையும் மதுரா கோட்ஸ் மில்லில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.
சகோதரிகளுக்குத் திருமணம் கூடும் போதெல்லாம் வீடு அடமானம் வைக்கப்படும் என்பதால், நண்பர்கள் வீட்டிலேயே தங்கும் அளவுக்கு பாப்பையாவின் இளமைக்காலம் சோகமானது. தமிழ் படித்தால் சோறு கிடைக்காது என்று சொல்லப்பட்டபோதும், தமிழ்ப் படித்து வறுமையையும், வாழ்க்கையையும் வென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

x